கேரளாவில் குறையாத கொரோனா வேகத்தின் பின்னணி என்ன?

கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரிக்கும் நிலையில், மாநில அரசுக்கு உதவி செய்ய மத்திய அரசு 6 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது.
x
கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரிக்கும் நிலையில், மாநில அரசுக்கு உதவி செய்ய மத்திய அரசு 6 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது. தமிழகத்தை காட்டிலும் அங்கு எதிர்ப்பு சக்தி திறன் குறைவாக உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வர நாடு போராடிக்கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் கேரளாவில் மட்டும் தொற்று பாதிப்பு அதிகமாக பதிவாகி வருகிறது.

நாடு முழுவதும் புதிதாக 43 ஆயிரத்து 509 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 50 சதவீத பாதிப்பு கேரளாவிலிருந்து பதிவாகியுள்ளது. அங்கு  22 ஆயிரத்து 56 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்திருக்கும் நிலையில், மாநில அரசு வாரஇறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. 


இதற்கிடையே கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு உதவி செய்ய தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அனுப்பியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா கட்டுக்குள் இல்லாத நிலையில் கேரள அரசு பக்ரீத் பண்டிகைக்காக 3 நாட்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது விமர்சனத்திற்கு உள்ளானது. மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தியோர் விகிதம் அதிகமாக இருந்தாலும்  மக்கள் மத்தியில் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பாக ஐசிஎம்ஆர் அமைப்பின் 4-வது செரோ சர்வே ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 69 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு திறன் உள்ளதாகவும், அதே சமயம் கேரளாவில்,  42.7 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கேரளாவில் இன்னும் 48 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து முயன்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்