இந்திய அரசியலும்... உரையாடல் ஒட்டுக்கேட்பும் : வாட்ஸ்அப் மூலம் கைவரிசை காட்டிய பெகாசஸ்!

பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கியதுடன், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் இந்திய அரசியலில் எப்போது எல்லாம் பூதகரமாக வெடித்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய அரசியலும்... உரையாடல் ஒட்டுக்கேட்பும் : வாட்ஸ்அப் மூலம் கைவரிசை காட்டிய பெகாசஸ்!
x
பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கியதுடன், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் இந்திய அரசியலில் எப்போது எல்லாம் பூதகரமாக வெடித்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....

ஒருவரை பற்றிய தகவலை அவருக்கு தெரியாமலே திரட்டுவதே உளவு பார்ப்பதாகும்...

ஒரு நாட்டின் பாதுகாப்புக்காக எதிரிநாட்டு படைகளின் நகர்வுகளையும், வியூகங்களையும் உளவுபார்ப்பது என்பது மன்னர் ஆட்சிதொட்டு மக்களாட்சியிலும் தொடர்கிறது. 

ஆனால் ஜனநாயக ஆட்சியில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், செய்தியாளர்கள், அரசு அதிகாரிகள் உளவு பார்க்கப்படுகின்றனர் என்ற தகவல் வெளியாகும்போதுதான் பிரச்சினை வெடிக்கிறது. 

இப்போது பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தில் இந்த குற்றச்சாட்டுதான் முன்வைக்கப்படுகிறது. 

இது இந்திய அரசியலில் புதிதாக நடப்பதா? என்றால் கிடையாது... ஆம் இந்திய அரசியலில் உளவுபார்ப்பு விவகாரம்,,, ஆட்சி கவிழ்ப்பு... முதல்வர் ராஜினாமா மற்றும் அரசியலை உலுக்கிய விசாரணைகளுக்கும் வித்திட்டிருக்கிறது.

கடந்த 1988 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் ஜனதா தள ஆட்சியில் உட்கட்சி தலைவர்கள், செய்தியாளர்கள் என 50 பேரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது நெருக்கடிக்கு மத்தியில் ராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலக நேரிட்டது.

1991 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த சந்திரசேகர், நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வீட்டில் அரியானா போலீசார் இருவரை உளவுபார்க்க பணியமர்த்தினார் என்ற தகவல் பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் விலக்கிக்கொள்ள, சந்திரசேகர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2008 ஆம் ஆண்டு ரகசியமாக பதிவு செய்யப்பட்ட பிரபல அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகி 2-ஜி உள்பட பல்வேறு விவகாரங்கள் கசிந்தது இந்திய அரசியலை சூறாவளி போல் புரட்டிப்போட்டது.

2011-ல் அப்போதைய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கு எழுதிய ரகசிய கடிதம் கசிந்தது. அதில், நிதியமைச்சகம் கண்காணிக்கப்படுவதாக தாம் சந்தேகிப்பதாக பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார் என தகவல் வெளியாகியிருந்தது.

2009 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, பெண் பொறியாளர் கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டதாக 2013-ல் வெளியான ஆடியோ உரையாடல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

2014 ஆம் ஆண்டு ஹவாலா வழக்கில் சிக்கிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷியின் பிளாக்பெர்ரி மெசஞ்சரில் பகிரப்பட்ட தகவல் கசிந்து சலசலைப்பை ஏற்படுத்தியது. அப்போது என்கிரிப்ஷன் வசதிக்கொண்ட பிளாக்பெர்ரி மெசஞ்சர் மிகவும் பாதுகாப்பு கொண்டதாகவே பார்க்கப்பட்டது.  


கடந்த 2019 ஆம் ஆண்டும் செய்தியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் செல்போன் உரையாடல் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. 

அப்போது மிகவும் பாதுகாப்பு கட்டமைப்பு கொண்டதாக பார்க்கப்படும் வாட்ஸ் அப் செயலி மூலமாகவே பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.



Next Story

மேலும் செய்திகள்