24 நாட்களில் முதலீடு இரட்டிப்பு - இந்தியர்களுக்கு வலை விரிப்பு

இந்தியாவில் முதலீடு இரட்டிப்பாகும் என செல்போன் செயலிகள் மூலம் சீனர்கள் 150 கோடியை சுருட்டிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 நாட்களில் முதலீடு இரட்டிப்பு  - இந்தியர்களுக்கு வலை விரிப்பு
x
கொரோனாவின் வேட்டைக்கு மத்தியில், சீனர்களின் பண மோசடி வேட்டை இந்தியாவில் அரங்கேறுவது தொடர்கதையாக உள்ளது.ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால், முதலில் அவன் ஆசையை தூண்ட வேண்டும் என்ற திரைப்பட வசனத்தை கட்சிதமாக நிறைவேற்றி வருகிறார்கள் சீனர்கள். இதற்காக அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் செல்போன் செயலிகள்... ஏற்கனவே கடன் செயலி என ஆசையைகாட்டிய சீனர்கள், இப்போது முதலீடு இரட்டிப்பாகும் என கைவரிசையை காட்டியுள்ளனர்.இதற்காக  பவர்பேங்க், ஈ- இஸட்-பிளான் என இரு செயலிகளை வெளியிட்டு, 24 நாட்களில் முதலீடு என்ற கவர்ச்சி விளம்பரத்தை அறிவித்து உள்ளனர்.செயலியை தரவிறக்கம் செய்வோரிடம் கேரமா மற்றும் தொடர்பு விபரங்களை அணுகும் அனுமதியை பெற்றுவிடுகிறது. பின்னர் பயன்படுத்துவோர் முதலில் முதலீடு செய்யும் போது  5 முதல் 10 சதவீதம் வரையிலான தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது. பணம் திரும்ப கிடைத்து நம்பிக்கை பெற்றதும் பலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்து உள்ளனர். அவ்வாறு செய்யும் போது அவர்களுடைய கணக்கு முடங்கியுள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் தங்களுடைய மனக்குமுறலை வெளியிடவும் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க தொடங்கியிருக்கின்றனர். அப்போது இந்த செயலிகளின் மெயின் சர்வர் சீனாவில் இருப்பதும், அங்கிருந்து கையாளப்படுவதும் தெரியவந்திருக்கிறது. 
மேலும்,  பவர் பேங்க் செயலி, கூகுள் பிளேயில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் 4-வது இடம் உள்ளதும் தெரியவந்துள்ளது.  தொடர்ந்து கண்காணிப்பையும், விசாரணையையும் தீவிரப்படுத்திய டெல்லி போலீசார், திபெத்திய பெண், 2 பட்டைய கணக்காளர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் உதவியுடன்  சீனர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு வங்கி கணக்கை வைத்திருந்ததும், பணம் கைமாறுவது தெரியாமல் போலியாக 110 செல் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இருந்ததும் தெரியவந்து உள்ளது.  பெங்களூரு, டெல்லி, ஒடிசா, அசாம், மேற்கு வங்கம், சூரத் உள்பட பல இடங்களில் மோசடி கும்பல் செயல்படுவது தெரியவந்திருக்கிறது. இந்த மோசடி கும்பல் 2 மாதங்களில் 5 லட்சத்திற்கும் அதிமானோரிடம் 150 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடியாக சுருட்டி உள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்