இளம்பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை - சைக்கோ நபரை தேடி வரும் போலீசார்

கேரளாவில் இளம்பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை செய்த சைக்கோ நபரை போலீசார் தேடி வருகின்றனர். பதற வைக்கும் இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்...
x
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மார்ட்டின் ஜோசப். கண்ணூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஒன்றாக கொச்சியில் ஒரே பிளாட்டில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மார்ட்டினின் நடவடிக்கைகள் பிடிக்காத அந்த பெண், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு  வெளியேற முயன்றுள்ளார். இதனை அறிந்த மார்ட்டின் அந்த பெண்ணை அறையில் அடைத்து வைத்து சொல்லவே முடியாத அளவுக்கு சித்ரவதைகளை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததுடன் உடலில் சூடு வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் நிர்வாணமாக அவரை வீடியோ எடுத்து வைத்ததோடு, சிறுநீரை குடிக்க வைத்தும் துன்புறுத்தியதாக தெரிகிறது. கிட்டத்தட்ட 15 நாட்களாக கொடுமையை அனுபவித்து வந்த அந்த பெண் ஒரு கட்டத்தில் தப்பிச் சென்று எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் இப்போது வெளியே வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதிலும் இதுவரை மார்ட்டின் ஜோசப்பை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமின் கேட்டு மார்ட்டின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போதும் போலீசார் அவரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அதேநேரம் கொச்சியில் இருந்து திருச்சூர் செல்ல மார்ட்டினுக்கு உதவியதாக ஸ்ரீராக், ஜான் ஜாய் மற்றும் தனேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மார்ட்டின் ஜோசப் திருச்சூரில் தலைமறைவாக இருக்கலாம் என்பதால் அவரை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளது. அதேநேரம் கடந்த 8ஆம் தேதி கக்கநாடு அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மார்ட்டின் தப்பிச்செல்வதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...இது ஒருபுறமிருக்க மார்ட்டின் இதற்கு முன்பாக வேறொரு பெண்ணையும் இதே பாணியில் கொடுமைப்படுத்தியதாக வேறொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...பெண்களை இதுபோல் கொடுமைப்படுத்தி ரசிப்பதே மார்ட்டினின் வழக்கமாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சைக்கோ போல செயல்பட்டு வந்த மார்ட்டினை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் சிக்கும் பட்சத்தில் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....


Next Story

மேலும் செய்திகள்