எது தேசத்துரோகம்..? - "வரையறை செய்யும் நேரம் வந்துவிட்டது" - உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து

இந்தியாவில் தேசத்துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், எது தேசத்துரோகம் என்பதை வரையறை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது என பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்கின் பின்னணி குறித்து பார்க்கலாம்.
x
ஆந்திராவில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சனம் செய்த காரணத்திற்காக அவரது சொந்த கட்சியை சேர்ந்த எம்.பி. ரகுராம கிருஷ்ணம்ம ராஜு தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அரசுக்கு எதிரான அவதூறுக்கு கிருஷ்ணம்ம ராஜுவின் பேச்சு உதவுவதாக கூறி இரு தனியார் செய்தி சேனல்கள் மீதும் தேசவிரோத வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு செய்தி சேனல்களும், நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருப்பவரது பேட்டியை ஒளிபரப்பு செய்வது தேசத்துரோகம் ஆகாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இது குறித்த விசாரணை  நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், என்.எல். ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.  

அப்போது இது தேசத்துரோகமா...?, செய்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து இருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்குவதாக இருக்கிறது என செய்தி சேனல்கள் தரப்பில் வாதிடப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செய்தி சேனல்கள் மற்றும் அவற்றின் ஊழியா்கள் மீது காவல்துறையினா் எந்தவித நடவடிக்கையையும் எடுக்க கூடாது என உத்தரவிட்டனர்.

ஊடகங்களுக்கான உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 124 ஏ (தேச துரோகம்), பிரிவு 153ஏ (இருவேறு சமூகங்களுக்கு இடையில் பகைமையை தூண்டுதல்) மற்றும் பிரிவு 505 இருவேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முடியுமா என விளக்கம் தேவைப்படுகிறது என்ற நீதிபதிகள்,ஆந்திர மாநில அரசு 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் விடுத்து உத்தரவிட்டனர்.

மேலும் எல்லாவற்றையும் தேசத்துரோகம் என்று கூறிவிட முடியாது எனக் கூறிய நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, எது தேசத்துரோகம் என்பதை வரையறை செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது என கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியச் சட்டவியலில் தேசத்துரோகத்தை வரையறுக்கும் பிரிவு 124 ஏ ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் 1870-ல் இணைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அரசியல் நிர்ணய சபை ஆலோசனையை அடுத்து,1949 நவம்பர் 26-ல் தேசத்துரோகம் என்ற வார்த்தை அரசியலமைப்பில் நீக்கப்பட்டது. ஆனால், இந்திய தண்டனை சட்டத்தில் சட்டப்பிரிவு 124ஏ நீடித்து வருகிறது. 

1962-ல் பிகார் மாநில அரசுக்கும், கேதார்நாத் சிங்கிற்கு இடையிலான வழக்கில், 124 ஏ சட்டப் பிரிவை அங்கீகரித்த உச்சநீதிமன்ற அரசியமைப்பு அமர்வு, அரசின் செயல்பாடுகளை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது தேசத்துரோகம் ஆகாது எனக் கூறியிருந்தது. தொடர்ந்து தேசத்துரோக வழக்கு தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்குகளில் நீதிமன்றங்கள் இந்த தீர்ப்பையே பொதுவாக சுட்டிக்காட்டி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்