இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
x
இந்தியா ஐடியாஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த மாநாட்டில் பங்கேற்றார். அமெரிக்கா இந்தியா வர்த்தக கவுன்சிலின் 45 ஆம் தொடக்க விழாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறந்த எதிர்காலத்தை கட்டமைத்தல் என்னும் தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். காணொலி காட்சி வழியாக பங்கேற்ற மோடி,  உலகிற்கு தற்போது சிறப்பான எதிர்காலம் தேவை, அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்  என்று கூறினார். கடந்த பல தசாப்தங்களாக யு.எஸ்.ஐ.பி.சி இந்தியா மற்றும் அமெரிக்க இடையிலான வணிக உறவை வலுப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய பிரதமர், உலகளாவிய பொருளாதாரம், செயல்திறம் மற்றும் தேர்வு முறை ஆகியவற்றில் இந்தியா அதிக கவனம் செலுத்தியுள்ளதாக கூறினார். இந்தியா மீதான நேர்மறை எண்ணங்கள் உலக அளவில் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.   

இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் சீர்திருத்தமும், வெளிப்படைத்தன்மையுடன் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். தொழில்வாய்ப்புள்ள நாடாக இந்தியா மாறி வருவதையும், கிராம‌ப்புறங்களில் இணையதள பயன்பாடுகள் நகர்ப்புறங்களை விட அதிகரித்துள்ளதையும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா என்பது ஏராளமான வாய்ப்புகளுக்கான நிலம் என கூறிய பிரதமர் தொடர்ந்து இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவில் வேளான் துறையில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகவும், தொழில்நுட்பத்தில் 5ஜி, பிக் டேட்டா, அனலிட்டிக்ஸ், குவாண்டம் கம்யூட்டிங் ஆகியவற்றில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதாகவும் மாநாட்டில் அவர் தெரிவித்தார். தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார். உள்கட்டமைப்பு , எரிசக்தி துறை, சுகாதாரத்துறையிலும் முதலீடு செய்ய இந்தியா அழைப்பதாக கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் வீடுகள், நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் கட்டுவதில் இந்தியாவுடன் இணைந்து செயல்படவும் அழைப்பு விடுத்தார். 

போக்குவரத்து துறையை பற்றி பேசிய பிரதமர், தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கத்திலும், விமான நிலைய உள்கட்டமைப்பிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மேலும் விமான போக்குவரத்து துறையில் முதலீடு செய்ய இதுவே மிகச்சிறந்த தருணம் என கூறிய பிரதமர், அடுத்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என்று கூறினார். 10 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய விமானங்களை சேர்க்க தனியார் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


இதேபோல பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையிலும் முதலீடு செய்ய அழைப்பு விடுத்த பிரதமர், விண்வெளித்துறையில்  தனியார் முதலீட்டுக்கு ஊக்கமளித்து வருவதாக குறிப்பிட்டார். பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்வதற்கான அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்துவதாகவும் பிரதமர் அறிவித்தார். காப்பீட்டு துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டிற்கு தற்போது அனுமதி அளிப்பதாக கூறிய பிரதமர், காப்பீடு,வேளாண்மை, கல்வித் துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாக தெரிவித்தார். 






Next Story

மேலும் செய்திகள்