துல்கர் சல்மான் படத்தில் பிரபாகரனை அவமதிக்கும் காட்சி - மலையாள பட காட்சிக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான மலையாள படத்தில் பிரபாகரனை அவமதிக்கும் வகையிலான காட்சி இடம் பெற்றுள்ளதாக கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
துல்கர் சல்மான் படத்தில் பிரபாகரனை அவமதிக்கும் காட்சி - மலையாள பட காட்சிக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு
x
மலையாள பட இயக்குனர் அனூப் சத்யன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் வரனே அவஷ்யமுண்டு. 

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் சுரேஷ்கோபி, ஷோபனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படமானது, கடந்த சில நாட்களுக்கு முன் டிஜிட்டலில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் சுரேஷ்கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. படக்குழுவின் இந்த செயலைப் பார்த்த தமிழர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். 

விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெயரை நாய்க்கு வைத்ததன் மூலம் தமிழர்களை இழிவுபடுத்தியதாகவும் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என எதிர்ப்பு குரல்களும் வலுத்து வந்தது. 

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த காட்சியை வைத்ததில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், இதனால் காயப்பட்டதாக கருதும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். 

இது ஒருபுறமிருக்க இப்போது இந்த விவகாரத்தை அரசியல் கட்சியினரும் கையில் எடுத்துள்ளனர். படத்தில் பிரபாகரனை முன்வைத்து இதுபோன்ற காட்சி வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான காம்ரேட் இன் அமெரிக்கா படத்தில் பிரபாகரனின் படம் ஒரு காட்சியில் வருவது போல இருப்பதால் அவருக்கு நிச்சயம் பிரபாகரனை பற்றி தெரிந்திருக்கும் என்றும், இப்போது துல்கர் சல்மான் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.  

துல்கர் சல்மான் பொது வெளியில் மன்னிப்பு கேட்டாலும் கூட, உடனடியாக அந்த காட்சியை நீக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் சீமான். 

பிரபாகரனை அவமதிக்கும் இந்த சினிமா காட்சியால் தமிழ் உணர்வாளர்களின் மனது பெரிதும் காயப்பட்டிருப்பதாகவும், உடனடியாக அந்த காட்சியை நீக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதேபோல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். 

துல்கர் சல்மான், பொதுவெளியில் மன்னிப்பு கேட்ட போதிலும், படத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் அந்த காட்சியை நீக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது. 

இதற்கு துல்கர் சல்மான் என்ன சொல்ல போகிறார் என்பதே தமிழ் உணர்வாளர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்