இயற்கை விவசாயத்தில் புரட்சி - ஐ.நா.விடம் தங்க விருது பெற்ற மாநிலம்

இயற்கை விவசாயத்தை பின்பற்றுவதில், மாபெரும் புரட்சி செய்து கொண்டிருக்கும் சிக்கிம் மாநிலத்தின் சாதனைகளைப் பதிவு செய்கிறது இந்த தொகுப்பு
இயற்கை விவசாயத்தில் புரட்சி - ஐ.நா.விடம் தங்க விருது பெற்ற மாநிலம்
x
செயற்கையான ரசாயனங்களுக்கு இடம் கொடுக்காமல், முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்திற்கு, முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக சிக்கிம், சாதனை புரிந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் பின்பற்றப்படும் இயற்கை விவசாயம், இந்தியாவை மட்டுமல்ல, உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்த செயல்பாட்டிற்காக, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, சிக்கிம் மாநிலத்திற்கு, தங்க விருது வழங்கி கவுரவித்துள்ளது. இது மட்டுமல்ல... உலகின் 'முதல் இயற்கை விவசாய மாநிலம்' என்ற பெருமையையும் சிக்கிம் பெற்றுள்ளது. இந்த விருதுக்காக, 25 நாடுகளில் இருந்து 51 விவசாய இடங்கள், பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதில், சிக்கிம் மாநிலம், அனைத்து வகையிலும் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்திற்கு அடுத்த இடங்களில், பிரேசில், டென்மார்க், கொய்டோ நகரம் ஆகியவற்றுக்கு வெள்ளி விருது கிடைத்துள்ளது. ஐ.நா. அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் மனித சமூகத்திற்கான மேம்பாட்டு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விவசாயத்திற்கு பயன்படுத்தும் மண்ணின் தரம், ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல், காடு வளர்ப்பு, பூச்சி இனங்களை பாதுகாத்தல், பயிர் சாகுபடி முறைகள் உள்ளிட்ட நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு விருது அறிவிக்கப்பட்டது.இந்த விருதுக்கான தகுதியை சிக்கிம் மாநிலம் 2003-ம் ஆண்டே பெற்று விட்டது. அப்போது, இயற்கை விவசாயத்திற்கு மாறப் போவதாக அறிவித்ததுடன், அதனை உடனடியாக நடைமுறைக்கும் கொண்டு வந்தது. ரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. 
கடந்த 15 ஆண்டுகளாக சிக்கிமில், இயற்கை விவசாயம் தான், பின் பற்றப்பட்டு வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் விவசாய கொள்கையை, உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.சிக்கிம் மாநிலத்திற்கு தலை வணங்குவோம்

Next Story

மேலும் செய்திகள்