வித்தியாசமான வழிபாட்டு முறைகள் விதிகள் கொண்ட கோவில்கள்

சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதே போன்ற வித்தியாசமான வழிபாட்டு முறைகள் கொண்ட சில கோவில்கள் இருந்து வருகின்றது
வித்தியாசமான வழிபாட்டு முறைகள் விதிகள் கொண்ட கோவில்கள்
x
* ஹரியானா மாநிலம் பெஹோவாவில், சூரனை வதம் செய்த முருகன், இங்கு தேவர்களின் போர் தளபதியாக கொண்டாடப்படுகிறார். அவர் பிரம்மச்சரிய கோலத்தில் இருப்பதால், பெண்களுக்கு அனுமதி இல்லை. இங்கு பக்தியுடன் வழிபடும் எந்த ஆண்மகனும் தான் எடுத்த எந்த காரியத்திலும் வெற்றி பெறுவான் என்பது நம்பிக்கை. 

* சபரிமலை போலவே, அஸ்ஸாம் மாநிலம் பட்பவுசி சத்ரா கோவிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை. மாதவிடாய் போன்ற உடல் ரீதியான காரணங்கள் தான் இங்கும் சொல்லப்படுகின்றன. 

* மாதவிடாய் காரணமாக சில இடங்களில் அனுமதி மறுப்பு என்றால், மாதவிடாயை கொண்டாடும் கோவிலும் இந்தியாவில் உண்டு. 51 சக்தி பீடங்களில் ஒன்றான அஸ்ஸாமின் காமக்யா கோவிலில், மாதவிடாய் என்பது பெண்மையின் தனித்துவமாக போற்றப்படுகிறது. 

* இங்கு வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் தேவியின் மாதவிடாய் காலம் வருவதாக நம்பப்படுகிறது. 

* 3 நாட்கள் கோவில் மூடப்பட்டு, 4ம் நாள் பெரிய விழா கொண்டாடப்படுகிறது. அப்போது அங்கு ஓடும் பிரம்மபுத்ரா நதி சிவப்பு நிறமாக மாறும் என்றும், அதன் நீரும், சிவப்பு நிற துணியும் பிரசாதமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.   

* ஆண்களுக்கு அனுமதி மறுக்கும் கோவில்களும் நம் நாட்டில் உண்டு. கேரளாவின் ஆற்றுக்கால் பகவதி கோவிலில் பொங்கல் பண்டிகையின் போது ஆண்களுக்கு அனுமதி இல்லை. அந்த காலகட்டத்தில் மட்டும் அங்கு சுமார் 3 கோடி பெண்கள் ஒன்று கூடி பொங்கலிடும் நிகழ்வு, கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. 

* இதே போல, கேரளாவின் சக்குதலத்துக்காவு பகவதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 'நாரி பூஜை' என்னும் பெண்களுக்கான கொண்டாட்டம் நடைபெறுகிறது. 10 நாட்கள் விரதம் இருந்து பூஜை செய்யும் பெண்களுக்கு ஆண் பூசாரிகள் பாத பூஜை செய்ய வேண்டும். இந்த விழாக்காலத்தில் ஆண் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. 

 * ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் 14 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிரம்மா கோவிலுக்குள் திருமணமான ஆண்களுக்கு அனுமதி இல்லை. அப்படி சென்றால் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரும் என்று நம்பப்படுகிறது. 

* திருமணமான ஆண் பக்தர்கள் வெளி மண்டபம் வரை சென்று, இறைவனுக்கான தங்கள் காணிக்கைகளை பிரம்மச்சாரிகளிடம் கொடுத்து அனுப்பி விட வேண்டும். 
 
* மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரர் கோவில் வழக்கு சற்று வித்தியாசமானது. கோவிலின் கர்ப்பகிரகத்திற்குள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. 

* பெண்கள் செல்ல முடியாது, ஆண்களும் குறிப்பிட்ட நேரங்களில் தான் செல்ல முடியும் என்று விதி இருந்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதன் விளைவாக - தற்போது ஆண், பெண் இருவருமே கர்ப்பகிரகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை என விதி மாற்றப்பட்டு விட்டது. 

Next Story

மேலும் செய்திகள்