ஜாதிகளை வகைப்படுத்துவதற்கான ஆணையத்தின் ஆயுட்காலம் மேலும் 4 மாதங்கள் நீட்டிப்பு...
நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள ஜாதிகளை வகைப்படுத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ரோஹிணி தலைமையில் ஆணையம் அமைத்து, கடந்த அக்டோபர் மாதத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உத்தரவு பிறப்பித்தார்.
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில், நலிவுற்ற சமூகத்தினருக்கு சலுகைகள் கிடைக்கப் பெறச்செய்யும் வகையில் ஆணையம் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவிற்குள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு இருப்பது போல, தேசிய அளவிலும் பிரிவுகளை உண்டாக்குவது குறித்தும் ரோஹிணி ஆணையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ரோஹிணி ஆணையத்தின் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஆணையத்தின் ஆயுட்காலத்தை மேலும் 4 மாத காலம் நீட்டித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நவம்பர் 30-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் குடியரசுத் தலைவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சாதகமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Next Story