பாசக்கார தாயின் 13 ஆண்டு கால போராட்டம் : மகனின் மரணத்திற்கு, நீதி கேட்டு, சட்டப் போராட்டம்

கேரளாவில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 2 காவலர்களுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாசக்கார தாயின் 13 ஆண்டு கால போராட்டம் : மகனின் மரணத்திற்கு, நீதி கேட்டு, சட்டப் போராட்டம்
x
திருவனந்தபுரம், நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த பிரபாவதி அம்மாவின் மகன் 24 வயதான உதயகுமார். சுமை தூக்கும் தொழிலாளரான இவரை, 2005-ம் ஆண்டு, விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது, உதயகுமாரிடம் 4 ஆயிரத்து 500 ரூபாய் இருந்ததால், அவர் திருடியதாக கூறி, 'லாக்-அப்பில்' வைத்து, கடுமையாக அடித்துள்ளனர். 

ஓணம் பண்டிகைக்காக கடை உரிமையாளர் வழங்கிய போனஸ் என்று, உதயகுமார் கூறிய போதும், நம்ப மறுத்த காவலர்கள், கடுமையாக தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த அவர், உயிரிழந்தார்.உதயகுமாரை, காவலர்கள் அடித்துக் கொன்று விட்டதாக கூறி, பிரபாவதி அம்மாள் புகார் அளித்தார். ஆனால், ஆவணங்கள் திருத்தப்பட்டன, வழக்கு நீர்த்துபோக செய்யப்பட்டது.இந்த விவகாரம், கேரளாவில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. பிரபாவதி அம்மாவுக்கு ஆதரவாக, போராட்டங்களும் நடந்தன.

இதையடுத்து, வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து, 13 ஆண்டுக்குப் பின்னர், சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஐ. ஜிதுகுமார் மற்றும் மூத்த காவலர் ஸ்ரீகுமார் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து, நீதிபதி நாசர் உத்தரவிட்டார். வழக்கில் ஆவணங்களை அழித்து குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதாக, முன்னாள் போலீஸ் எஸ்.பி.க்கள் ஹரிதாஸ், சாபு மற்றும் டி.எஸ்.பி.அஜித் குமார் ஆகியோருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தீர்ப்பு வெளியானதையொட்டி உதயகுமாரின் தாய் பிரபாவதி அம்மா நீதிமன்றம் வந்திருந்தார். தீர்ப்பை கேட்டு அவர் கண் கலங்கினார்.ஒரு தாயின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றியுள்ளார் என, அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்