காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தது...ஒழுங்காற்று குழுவுக்கு 9 உறுப்பினர் பெயர்கள் அறிவிப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை நிர்வகிப்பவர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது
காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பாட்டுக்கு வந்தது...ஒழுங்காற்று குழுவுக்கு 9 உறுப்பினர் பெயர்கள் அறிவிப்பு
x
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை நிர்வகிப்பவர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பான அறிவிப்பு கடந்த ஒன்றாம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒரு தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் இணை செயலாளர் அகில் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படும். மத்திய நீர்வளத் துறை தலைமை பொறியாளர் நவீன் குமார்,  கூடுதல் பொறுப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர உறுப்பினராக இருப்பார். மத்திய நீர்வளத் துறை இணை செயலாளரும்,  வேளாண்துறை இணை  செயலாளரும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பகுதி நேர உறுப்பினராக செயல்படுவர். வேளாண்துறை ஆணையர், காவிரி ஆணைய பகுதி நேர உறுப்பினர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், கேரள மாநில நீர்வள துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறை செயலாளர் அன்பரசு ஆகியோர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக செயல்படுவார்கள். கர்நாடகம் சார்பில் எந்த உறுப்பினரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அம்மாநில நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் தகுதியில் உள்ளவர் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்