மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டான பொற்கோயில்..

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயில் பற்றிய சிறப்பை பார்க்கலாம்...
மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டான பொற்கோயில்..
x
ஹர்மந்திர் சாகிப் என்று அழைக்கப்படும் கடவுள் இல்லமான இந்த பொற்கோயில், இந்தியாவின் மிக சிறந்த கட்டமைப்புகளுள் ஒன்றாக திகழ்கிறது.

பழமையும், புதுமையும் ஒன்றாக இணைந்து புதுப்பொலிவுடன் பார்ப்பவர்களை கவரும் இந்த கோயில், தனது தூய்மை பராமரிப்பிற்கு என்று தனி பெயர் கொண்டது.

பொற்கோயில் வரும் அனைவரும் கால்களை சுத்தம் செய்த பிறகே அனுமதிக்கப்படுவர். கோயிலுக்கு வருவோர் தலையில் துணி சுற்றிக் கொண்டே உள்ளே வர வேண்டும். இல்லாதவர்களுக்கு துணி வழங்கப்படும். காலணி, சாக்ஸ், தடி, குடை போன்ற பொருட்களை உள்ளே கொண்டு வர அனுமதி கிடையாது.

கோயிலின் மீதுள்ள தங்கத்தால் ஆன குவி மாடம் , தாஜ்மகாலை நினைவுப்படுத்தும் பளிங்கு வேலைப்பாடுகள், கோயிலின் முதல்தளத்தில் கண்ணாடி மாளிகையான "சீஷ் மஹால்' , நான்கு வாசல்கள் என கோயிலின் உள்ளே உள்ள ஒவ்வொன்றும் கலைநயத்தை வெளிப்படுத்தும் வகையில் விசேஷமானது தான்.. 

குருத்வாரா, ஸ்ரீ தர்பார் சாகிப் என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த கோயில், குரு ராமதாஸ் என்பரது கடைசி மகனான அர்ஜூன்தேவால் குளத்தின் நடுவே கட்டப்பட்டது. இதற்கு அடிக்கல் நாட்டியவர் மியான் மிர் என்னும் முஸ்லிம் பெரியவர். குளத்தின் பெயரான "அமிர்த் சர்" பிற்காலத்தில் ஊரின் பெயராக வழங்கப்பட்டது.

18ம் நூற்றாண்டில் பல முறை கொள்ளை அடிக்கப்பட்ட இந்த கோயில், 1764ல், மீண்டும் கட்டப்பட்டது. 1802 ல் ராஜ ரஞ்சித்சிங் என்பவர் இக்கோயிலை தங்கத்தால் அலங்கரித்து, "பொற்கோயில்' என பெயரிட்டார். 

தண்ணீருக்கு நடுவில் இரவில் மின்னும் இந்த கோயிலில், வருடத்தின் முதல் பாதியான ஏப்ரல் மாதத்தில் பைசாகி விழா, இரண்டாம் பாதியான  நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் திருக்கார்த்திகை நாளும் விமரிசையாக நடைபெறுகிறது

இந்த கோயிலில் உலகமே வியக்கக்கூடிய இன்னொரு முக்கிய அம்சம் லங்கார் உணவுகள் தான்.. 
எந்த வித பாகுபாடும் இன்றி இங்கு யார் வேண்டுமானாலும் சமையலுக்கு உதவலாம். 

இரவு பகல் பாராமல் ரொட்டி, பருப்பு மற்றும் இனிப்பு போன்ற உணவுப் பொருட்கள் தயாராகும். நாள் ஒன்றிற்கு ஐம்பதாயிரம் பேருக்கும், விழா நாட்களின் போது ஒரு லட்சம் பேருக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. 

மத நல்லிணத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாக மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்களின் பசியினை போக்கும் இந்த கோயில், வரலாற்றில் தனக்கென்று தனி இடத்தினை என்று உறுதி செய்துள்ளது....

Next Story

மேலும் செய்திகள்