முற்றுப்புள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ் - 'D43' படத்தின் 3 பாடல் தயார் என அறிவிப்பு

தனுஷ் - ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் மீண்டும் பிரிவு என தகவல்கள் வெளியான நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
முற்றுப்புள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ் - D43 படத்தின் 3 பாடல் தயார் என அறிவிப்பு
x
2007ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் படத்தில் முதன்முறையாக தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி அமைந்தது. ஜி.வி இசையமைத்திருந்த 3 பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து ஆடுகளம், மயக்கம் என்ன படங்களில் மீண்டும் இந்த கூட்டணியில் அசத்தலான பாடல்களும் பின்னணி இசையும் இடம்பெற்றன. 
ஆனால் அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகளால் இந்த கூட்டணியில் பிரிவு ஏற்பட்டது. தனுஷ் - வெற்றிமாறனின் வடசென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு 2018ம் ஆண்டு மீண்டும் இருவரும் நட்பு பாராட்டி, அதன் அடையாளமாக வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்திற்காக தனுஷ் ஒரு பாடலை பாடியிருந்தார். இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் ஜி.வி.பிரகாஷ்-ன் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் D43 படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைப்பாளர் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு D43 படத்தில் இருந்து ஜி.வி விலகிவிட்டார் என இணையத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் , D43 படத்தின் 3 பாடல்கள் தயாராகிவிட்டதாகவும். 4வது பாடலுக்கு இசையமைத்து வருவதாகவும் ட்வீட் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஒரு அட்டகாசமான ஆல்பத்தை எதிர்பார்க்கலாம் எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டு , வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்


Next Story

மேலும் செய்திகள்