பாலுமகேந்திராவின் ஆன்மாவைக் கூட மன்னிக்க மாட்டேன் - மவுனிகா

1985 இல் சினிமாவில் நுழைந்த நடிகை மவுனிகா பாலுமகேந்திராவால் அறிமுகம் செய்யப்பட்டவர்
பாலுமகேந்திராவின் ஆன்மாவைக் கூட மன்னிக்க மாட்டேன் -  மவுனிகா
x
விஜயரேகா என்ற இயற்பெயர் கொண்ட நடிகை மவுனிகா, 1985 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில், இயக்குனர் பாலுமகேந்திராவால் அறிமுகப்படுத்தப்பட்டார். 1992 இல் வெளியான வண்ண வண்ணப் பூக்கள் திரைப்படத்தில் 2 ஆம் கதாநாயகியானார். அமராவதி, மே மாதம், சுபாஷ் உள்ளிட்ட சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பல திரைப்படங்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறார். 1990 களின் இறுதியில் சீரியல்களில் நடித்ததன் மூலம், பிரபலமானார். சொந்தம், சொர்க்கம், பாலுமகேந்திராவின் கதை நேரம், கலாட்டா குடும்பம் உள்ளிட்ட பல தொடர்கள் சின்னத்திரையில் இவருக்கென்று தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

2010 ஆம் ஆண்டு பானா காத்தாடி திரைப்படத்தில் கதாநாயகனின் அம்மாவாக நடித்து மீண்டும் திரையுலக பிரவேசத்தை தொடங்கினார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையில், இயக்குனர், பாலுமகேந்திராவுடன் 28 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார். இருவரது உறவு முறையும் விமர்சனங்களுக்குள்ளாகவும் தவறவில்லை. இருவருக்கும் 30 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்த நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், இணைந்து வாழ்ந்தனர். இதுபற்றி, பாலுமகேந்திரா பல மேடைகளில் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். 60 வயதுள்ள கதாநாயகனுக்கும் 20 வயதுக்கும் குறைவான இளம்பெண்ணுக்குமான காதல் கதைக்களத்துடன், சில திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அத்தகைய ஒரு உறவுமுறைதான் பாலுமகேந்திராவுக்கும், மவுனிகாவுக்குமானது.

மவுனிகாவுடனான தனது உறவு பற்றிப் பேசியுள்ள பாலுமகேந்திரா, மௌனிகாவும் தன் மனைவி தான் என்றும், வேலை இன்றி இருந்த காலங்களில் பொருளாதார ரீதியாக தன்னைத் தாங்கிப் பிடித்தவள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கணவன் - மனைவி என்று பொதுவெளியில் அறிவித்துக்கொள்ளாமல், இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். 90 களின் இறுதியில் கோயில் ஒன்றில் வைத்து மவுனிகாவுக்கு தாலி கட்டியதாக பின் நாட்களில் பகிரங்கமாக அறிவித்தார் பாலுமகேந்திரா.அப்போதுதான் இந்த விஷயம் வெளியுலகிற்கு தெரியவந்தது. 28 ஆண்டுகளாக நீடித்த இவர்களது பந்தத்தில், 2012 ஆம் ஆண்டு பிரிவு ஏற்பட்டது. அதன் பிறகு உடல் நலக்குறைவால் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார், பாலுமகேந்திரா.

கடைசியாக, பாலுமகேந்திராவின் முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று சென்ற மவுனிகாவுக்கு, பல எதிர்ப்புகள் கிளம்பின. நீண்ட போராட்டத்திற்குப் பின், சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து, சில நிமிடங்கள் மட்டும் பாலுமகேந்திராவின் உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். கடைசிவரை தனக்கென ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளாமல், பாலுமகேந்திராவுடன் வாழ்ந்த மவுனிகா, அவரது மறைவுக்குப் பிறகு சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்