"மெல்லிசை மன்னர்" என்று போற்றப்படுபவர் - எம்.எஸ். விஸ்வநாதன்

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் பிறந்தநாள் இன்று.
மெல்லிசை மன்னர் என்று போற்றப்படுபவர் - எம்.எஸ். விஸ்வநாதன்
x
கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு பிறந்த, எம்.எஸ்.விஸ்வநாதன், படிப்பில் ஆர்வமில்லாததால், பள்ளிக்கூடம் செல்லவில்லை. நடிகர், பாடகராக வரவேண்டும் என்ற விருப்பத்துடன், சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். பிறகு, இசையமைப்பாளர், சுப்புராமனின் இசைக்குழுவில் ஆர்மோனியக் கலைஞராக பணியாற்றினார். சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை எம்.எஸ்.வி - ராமமூர்த்தி இருவரும்தான் முடித்துக் கொடுத்தனர்.அன்றுமுதல் விஸ்வநாதன்- ராமமூர்த்தி கூட்டணி ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றி பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தது

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். எம்.எஸ்.வி. தனியாக 500 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். புதிய பறவை படத்தில் வரும் எங்கே நிம்மதி பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும்... பாகப்பிரிவினை படத்தில் வரும் தாழையாம் பூ முடிச்சு பாடலுக்கு மூன்றே இசைக் கருவிகளையும் பயன்படுத்தி இசையமைத்திருக்கிறார். இளையராஜாவோடு இணைந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு மோகன ராகத்தில் இசையமைத்தவர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார், எம்.எஸ்.வி. கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தனது இசையில் பாடவைத்த எம்.எஸ்.வி, தானும் பல பாடல்களைப் பாடியுள்ளார். காதல் மன்னன், காதலா காதலா உட்பட சில படங்களில் நடித்தும் இருக்கிறார், எம்.எஸ்.வி. புகழின் உச்சியில் இருந்தபோதும், எம்.எஸ்.வி. க்கு தான் ஒரு இசைமேதை என்ற கர்வம், ஒருபோதும் இருந்ததில்லை. அதனால்தான், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாரபட்சமின்றி, பாடி இருக்கிறார்.

நடிகர் சிவாஜி கணேசன்தான், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மெல்லிசை மன்னர் என்ற பட்டத்தை வழங்கி பெருமை சேர்த்தார். கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர் எம்.எஸ்.வி. காலத்தால் அழியாத தனது பாடல்களைப் போல், எம்.எஸ். விஸ்வநாதனும், ரசிகர்களின் நெஞ்சங்களில், என்றும், நீக்கமற நிறைந்திருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்