நடிகர் விஜய் பிறந்த நாள் இன்று...

தோல்விகளை வெற்றிப் படிகட்டுகளாய் மாற்றிய விஜய்...வசூல் மன்னன் என்ற அடையாளத்திற்கு சொந்தக்காரர்...
நடிகர் விஜய் பிறந்த நாள் இன்று...
x
இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள்... ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்யின் வெற்றி பயணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

விஜய்.. இந்தப் பெயர் தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்று... ஆண், பெண் பாகுபாடில்லாமல்.. சிறுவர், பெரியவர் வயது வித்தியாசமில்லாமல் ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர்  நடிகர், விஜய்... இளைய தளபதியாக இருந்து, இன்று தளபதியாக  உயர்ந்து, ரசிகர்களின் நெஞ்சங்களில்  சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் விஜய்யின் இயற்பெயர் கூட "வெற்றி" என்பதே... 

தந்தை ஒரு புகழ்பெற்ற இயக்குநர் என்றாலும் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து "அண்ணாமலை" பட வசனத்தை நடித்துக் காண்பித்து நடிக்க வந்தவரை, அப்போது விமர்சிக்காதவர்களே இல்லை..



தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் இயக்கத்தில், விஜய்காந்துடன் இணைந்து நடித்த "செந்தூரபாண்டி" திரைப்படம்,  விஜயை ஓரளவிற்கு "சி சென்டர்" கொண்டு சேர்த்தது என்றாலும், பெரிய வெற்றியைத் தரவில்லை. மனம் தளராமல் அடுத்தடுத்து தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்திலேயே நடித்து வந்தவருக்கு, "பூவே உனக்காக" திரைப்படம் தான் நடிகன் என்ற அந்தஸ்த்தை பெற்றுத் தந்தது.



"பூவே உனக்காக" வெற்றிக்குப் பிறகு  "லவ் டுடே", "ஒன்ஸ்மோர்", "நேருக்கு நேர்" என தடுமாறாமல் பயணிக்கத் தொடங்கியிருந்த சமயத்தில் தான் "காதலுக்கு மரியாதை" படத்திற்காக, விஜய்க்கு சிறந்த நடிகர் என்ற விருதை தமிழக அரசு வழங்கி கவுரவித்தது. அதன் பிறகு "துள்ளாத மனமும் துள்ளும்", "குஷி",  "ஃப்ரண்ட்ஸ்" போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென அடையாளத்தையும், இடத்தையும் பிடித்துக் கொண்ட விஜயை, அவரது ரசிகர்கள் இளையதளபதியாக ஏற்றுக் கொண்டனர்.



ரஜினி - கமல் என்ற இரு சாம்ராஜ்யங்களுக்கு நடுவிலும்  ஒரு ராஜாங்கம் நடத்தி வந்தார் விஜய்...... புழுதி பறக்க நடனமாடுவது, அதிர வைக்கும் படியாக சண்டை போடுவது,  குழைந்து குழைந்து காமெடி செய்வது என அக்மார்க் கமெர்ஷியல் பேக்கேஜாக மாறிய விஜய் அடுத்து தொட்டது அனைத்துமே  ஹிட்டுகள் தான். 



"திருப்பாச்சி", "சிவகாசி" என வரிசையாக சரவெடி வெடிக்க அதிர்ந்தது கோலிவுட்.....  2007-ஆம் ஆண்டில் வெளியான "போக்கிரி" திரைப்படம், விஜய்க்கு வசூல் மன்னன் என்ற பட்டத்தை தந்தது.... . 2012-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி, 100 கோடிகளுக்கு மேல் வசூலை அள்ளிய முதல் தமிழ்த் திரைப்படம். அதன் பிறகு "கத்தி", "தெறி", "மெர்சல்" என தொட்டதெல்லாமே லேண்ட் மார்க் வெற்றிகள் தான். 



தொடர் தோல்விகளால் முடங்கி விடாமல், ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் தன்னை புதிதாக உருவாக்கிக் கொள்ளத் தெரிந்த வித்தைக்காரராக விஜய் இருப்பதால் தான், தனது ரசிகர்கள் மத்தியில் ஒரு அண்ணனாகவும், தளபதியாகவும் விளங்குகிறார்.

Next Story

மேலும் செய்திகள்