கடலுக்குள் 11 நிலைகளில் உருவாகும் புயல்.. 11 வகை வார்னிங்.. 11ம் எச்சரிக்கை தான் குலைநடுங்க விடும்

x

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன ? துறைமுகங்களில் ஏற்றப்படும் இந்த எச்சரிக்கை கூண்டு சொல்வது என்ன ? விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..

தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் குறித்தான தகவல்களைப் பகிரும் வண்ணம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் மொத்தம் 11 வகை எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவது வழக்கம். ஒவ்வொன்றும் புயலின் ஒவ்வொரு நிலையை குறிப்பிடும் என்கிறார்கள்.

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலத்த காற்று வீசும் என்றும் பொருள்.

இரண்டாம் எண் கூண்டு, புயல் உருவாகி விட்டதை தெரிவித்து, துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும் என்பதை எச்சரிக்கும்.

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.

நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்றும் உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை என்றும் அர்த்தம்.

ஜந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பது பொருள். ஆறாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, புயல் துறைமுகத்தில் வலதுபக்கமாக கரையைக் கடக்கும் என்பது பொருள்.

ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் வலுப்பெற்று தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று அர்த்தம். மேலும், வலுப்பெற்ற புயல் துறைமுகத்தின் இடதுபக்கமாக கடக்கும் என்றும் அர்த்தம்.

ஒன்பதாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் வலுப்பெற்று தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது, துறைமுகத்தின் வலதுபக்கமாக கடக்கும் என்று பொருள். இதனால் துறைமுகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்பது பொருள்.

பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டுக்கு , அதி தீவிர புயலாக உருவாகி இருக்கும் புயல், துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்துசெல்லும் போது பெரிய அபாயம் ஏற்படும் என்று அர்த்தம்.

11 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு உச்சக்கட்ட எச்சரிக்கையை குறிக்கும். அதி தீவிர புயலால் வானிலை மையத்துடன் தகவல் துண்டிக்கப்பட்டது என்பது பொருள். இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயலால் பெரும் சேதம் ஏற்படும் என்பதும் பொருளாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்