"ஏன்டா உன் வயசு என்ன.. அவ வயசு என்ன" - ஊரே பார்க்க காவு வாங்கிய காதலி குடும்பம்

x

கர்நாடகாவில் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த 40 வயது நபர், வீடுபுகுந்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான பின்னணி என்ன? போலீஸ் கூறுவது என்ன? விரிவாக பார்ப்போம்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனையில் உடலில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூன்று பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

மூவரையும் காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சிக்க, சில மணித்துளிகளில் மூன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்று போலீசார் விசாரித்த போதுதான் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

உயிரிழந்த 40 வயதான மஞ்சுநாத் என்பவர் சித்ரதுர்கா மாவட்டம் கோணனூர் கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு திருமணமானதாகவும், அடுத்த சில மாதங்களில் மனைவி த*கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில், மஞ்சுநாத் கைதாகி, 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலையானதாக அறியப்படுகிறது. இந்த சூழலில்தான், அதே கிராமத்தைச் சேர்ந்த ரக்‌ஷிதா என்ற இளம்பெண்ணை மஞ்சுநாத் காதலித்துள்ளார்.

இளம்பெண்ணும் அவரிடம் காதல்வயப்பட, பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி அண்மையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதனால் கடுப்பான ரக்‌ஷிதாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, ரக்‌ஷிதா மேஜர் என்பதால், போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

ஊரைவிட்டு வெளியேறி இருவரும் வேறு ஊரில் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று தனது பெற்றோரை பார்ப்பதற்காக மஞ்சுநாத் கோணனூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த ரக்‌ஷிதாவின் குடும்பத்தினர், கும்பலாக மஞ்சுநாத் வீட்டில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மஞ்சுநாத்தை வீதியில் இழுத்துப்போட்டு கொடூரமாக வெட்டியதில், அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கினார்.

தடுக்க ஓடி வந்த மஞ்சுநாத்தின் பெற்றோரையும் அந்த கும்பல் வெட்டி வீசி தப்பியதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மஞ்சுநாத்தின் பெற்றோரிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், 6 பேரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்