சென்னை to கேரள சினிமா பாணியில் கை மாறிய பார்சல்கள் சோதனையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே 14 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு காரில் இருந்து லாரிக்கு பார்சல்கள் மாற்றப்படுவதைக் கண்டு விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியபோது, லாரியை சோதனை செய்ததில், அதில் 48 பார்சல்களில் பணம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லாரி மற்றும் கார்களில் வந்தவர்களை பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.

18 மணி நேரம் நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை பிராட்வேயில் இருந்து வெவ்வேறு வாகனங்களில் மாற்றி, அந்தப் பணத்தை கேரள மாநிலம், கோழிக்கோட்டுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

அந்தப் பணத்தை கொடுப்பது யாரென்றும் பெறுவது யாரென்றும் தங்களுக்குத் தெரியாது என்று கூறிய அவர்கள், 50 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக இந்த வேலையை செய்வதாக கூறினார்கள்.

ஒவ்வொரு இடத்திலும் ரகசிய வார்த்தை மூலம் பணம் பரிமாற்றப்படுகிறது என்றும் அவர்கள் கூறினார்கள்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோழிக்காட்டைச் சேர்ந்த நாசர், சர்புதின், சென்னையை சேர்ந்த நிஷார் அகமது, மதுரையை சேர்ந்த வாசிம் அக்ராம் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 14 கோடியே 70 லட்சத்து 85 ஆயிரத்து 400 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்