சோகத்தில் முடிந்த ஜல்லிக்கட்டு போட்டி - மருத்துவமனையை உலுக்கிய பெற்றோரின் கதறல்...

தருமபுரி அருகே ஜல்லிக்கட்டு காளை தாக்கி உயிரிழந்த சிறுவனின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
x

எல்லா ஊர்களிலும் தடல்புடலாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி, அதே உற்சாகத்தோடுதான் தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திலும் தொடங்கியது.

ஆனால், மிகப் பெரும் சோகத்தில் இது முடியும் என யாரும் நினைக்கவில்லை.

உழவர் நலத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். அந்த பிரமாண்டத்தைக் காண தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பாலக்கோடு பூ வியாபாரி சீனிவாசன் என்பவரின் மகன் கோகுலும் அதில் ஒருவர்.


15 வயதே ஆன கோகுல், காளைகள் வெளியே வரும் இடத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக காளை ஒன்று கோகுலின் வயிற்றில் முட்டி தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கோகுல், ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். உடனே, அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து, மருத்துவமனைக்கு வந்த கோகுலின் பெற்றோர், மகனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.


இந்த சோகத்திலும் ஒரு நெகிழ்ச்சி என்னவென்றால், சிறுவன் கோகுல் இறந்த பிறகும் இந்த உலகைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு அவரது இரண்டு கண்களையும் பெற்றோர் தானமாக வழங்கியதுதான். இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்று சிறுவனின் தந்தை சீனிவாசன் குற்றம் சாட்டினார்.



Next Story

மேலும் செய்திகள்