விமானங்களை பாதிக்கும் 5ஜி..?
2019 முதல் பயன்பாட்டில் 5 ஜி சேவை விமான சேவையை பாதிக்கும் 5ஜி தொழில்நுட்பம்... அமெரிக்காவுக்குள் விமானம் இயக்க தயக்கம்... விமான சேவையை ரத்து செய்யும் நாடுகள்... 5ஜியால் அமெரிக்காவிற்கு சிக்கல் விமானங்களுக்கும் 5ஜிக்கும் என்ன தொடர்பு? "அமெரிக்காவிற்கான விமான சேவை ரத்து" ஏர் இந்தியா அறிவிக்க காரணம் என்ன?;
2019 முதல் பயன்பாட்டில் 5 ஜி சேவை
விமான சேவையை பாதிக்கும் 5ஜி தொழில்நுட்பம்...
அமெரிக்காவுக்குள் விமானம் இயக்க தயக்கம்...
விமான சேவையை ரத்து செய்யும் நாடுகள்...
5ஜியால் அமெரிக்காவிற்கு சிக்கல்
விமானங்களுக்கும் 5ஜிக்கும் என்ன தொடர்பு?
"அமெரிக்காவிற்கான விமான சேவை ரத்து"
ஏர் இந்தியா அறிவிக்க காரணம் என்ன?
புதிய 5ஜி தொழில்நுட்பத்தை காரணம் காட்டி, ஏர் இந்தியா உட்பட பல நாடுகளின் விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. இந்நிலையில் 5 ஜி தொழில்நுட்பத்திற்கும் விமான சேவைக்கும் என்ன தொடர்பு என்பதை ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு...
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில், அதிகம் எதிர்பார்க்கப்படுவதில் 5 ஜி தொழில்நுட்பமும் ஒன்று...
இதனால் தான் போட்டி போட்டு கொண்டு பல செல்போன் நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன...
உலக நாடுகள் சிலவற்றில் 2019ஆம் ஆண்டு முதலே பயன்பாட்டில் இருந்து வரும் 5ஜி சேவையானது, இந்தியாவில் இந்த ஆண்டு முதல் 13 நகரங்களில் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
உலகை கொரோனா என்ற புதிய தொற்று படாதபாடு படுத்தி கொண்டிருந்த வேளையில், 5 ஜி தொழில்நுட்பத்தால் தான் கொரோனா பரவுவதாக ஒரு செய்தி காட்டு தீயாக பரவியது...
தற்போதும் 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு, பறவைகள், மனிதர்கள் என பூமியில் உள்ள அத்தனை உயிர்களையும் பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்படி பல காரணங்களுக்காக சர்ச்சையாகி வரும் 5ஜி தொழில்நுட்பம், தற்போது அமெரிக்காவில் மிக பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த ஆண்டே 5ஜி தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்திய அமெரிக்காவில் தற்போது 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், தான் உலகின் மிகப்பெரிய போயிங் 777 விமானத்தை இயக்கும், துபாய் எமிரேட்ஸ், அமெரிக்காவில் உள்ள ஒன்பது இடங்களுக்கான விமான சேவைகளை நிறுத்துவதாக கூறியுள்ளது.
அமெரிக்கா செல்லும் பல விமானங்களை ரத்து செய்வதாக ஏர் இந்தியாவும், ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
அதுமட்டுமல்ல... அமெரிக்காவின் விமான போக்குவரத்து துறையே 5ஜி தொழில்நுட்பத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தரையிலிருந்து விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது என்பதை அளவிடும் அல்டிமீட்டர் போன்ற கருவிகளை 5ஜி செல்போன் டவர்கள் பாதிப்பதாக கூறப்படுகிறது.
இது மட்டுமல்ல... விமான நிலைய ஓடுபாதையில் குழப்பம்... விமானங்கள் தரை இறங்குவது சிக்கல் என பல பிரச்சனைகளை 5 ஜி சிக்னல்கள் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மற்ற நாடுகளில் அந்த பிரச்சனை இல்லாத போது, அமெரிக்காவில் மட்டும் 5ஜி தொழில்நுட்பம் சிக்கலாகியுள்ளதற்கு காரணம் 5ஜி தொழில்நுட்பத்தின் ரேஞ்ச் அளவுதான்.
அமெரிக்காவில் சி பேண்டில் 3.7 முதல் 3.98 வரையிலான ஜிகாஹெர்ட்ஸ் ரேஞ்ச் அளவில் உள்ளது, 5ஜி தொழில்நுட்பம்..
ஏற்கெனவே 40 நாடுகளில் 5 ஜி பயன்பாட்டில் இருந்தாலும் அங்குள்ள ரேஞ்ச் அளவை விட இது அதிகமாகும்.
ஆனால், சர்வதேச அளவில் விமான சேவைக்கான அல்டிமீட்டர்கள் 4.2 முதல் 4.4 வரையிலான ஜிகாஹெர்ட்ஸ் ரேஞ்ச் அளவில் செயல்படுவதாகவும் அதைவிட குறைவாக உள்ள 5ஜி சிக்னல்களால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்காவில் 5ஜி சேவை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களான வெரிசான் மற்றும் ஏடி&டி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இருந்த போதும் விமான நிறுவனங்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்பு குரல் காரணமாக தற்போது அமெரிக்காவில் விமான ஓடுதளங்களுக்கு அருகே உள்ள செல்போன் டவர்களை இயக்காமல் நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.
இதற்கொரு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் அமெரிக்காவில் உள்ள 40 விமான நிலையங்களும், விமான போக்குவரத்தும், பயணிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.