உலக அளவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கை - அமெரிக்காவில் ஒரே நாளில் 77 ஆயிரம் பேர் பாதிப்பு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 77 ஆயிரம் பாதிப்படைந்துள்ளதுடன், 969 பேர் உயிரிழந்துள்ளனர்.;
பிரேசில் உயிரிழப்பு 78 ஆயிரத்தை தொட்டது
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 77 ஆயிரம் பாதிப்படைந்துள்ளதுடன், 969 பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில், பிரேசில் மிக மோசமான பாதிப்பினை சந்தித்துள்ளது. அங்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 78 ஆயிரம் பேர்வரை உயிரிழந்துள்ளனர். தினசரி ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் தொற்று எண்ணிக்கை மிக வேகமான அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளை திறப்பதற்கு அரசு வலியுறுத்தி வருவதால், மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
பழமையான தேவாலயத்தில் தீ விபத்து : நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்
பிரான்ஸ் நாட்டின் , நான்டெஸ் நகரில் உள்ள மிக பழமையான தேவாலயத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த 104 தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக தண்ணீரை பீயிச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கறுப்பின இளைஞரை கழுத்தை நெரித்த லண்டன் போலீஸ் - அமெரிக்காவை போல் இங்கிலாந்திலும் நடந்த சம்பவம்
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்கிற கறுப்பினர் இளைஞருக்கு நடந்த சம்பவம் போல, பிரிட்டனில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லண்டன் தெற்கு பகுதியில் சிலர் மோதலில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கத்தியுடன் இருந்த கருப்பின இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முயன்றனர். அந்த நபர் ஒத்துழைக்கவில்லை என்பதால், போலீஸார் அவரை தரையில் தள்ளி கழுத்தில் காலால் நெரித்தனர். அப்போது மூச்சுவிட முடியாத அவர், கழுத்தில் இருந்து காலை எடுங்கள், நான் எந்த தவறும் செய்யவில்லை என கூறியுள்ளார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஒரு போலீஸ் அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
கனமழையால் குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம் - தாழ்வான இடங்களில் இருந்து மக்கள் மீட்பு
சீனாவில் கடந்த சில தினங்களாக தொடரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு மாகாண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், ஜியாங்சி, ஹுபேய், அன்ஹுயி உள்ளிட்ட மாகாணங்கள் தனித்தீவு போல் காட்சி அளிக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு கோடி 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவி வழங்கப்பட்டது. வெள்ளம் பாதித்த இடங்களில் சிக்கி தவிக்கும் மக்களின் அவசர தேவைக்கு உதவுவது, அவர்களை மீட்பது, வெள்ள தடுப்பு பணிகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.