மெல்ல தளர்ந்தது ஊரடங்கு - இயல்பு நிலைக்கு திரும்பும் உலகம்...
புயலுக்கு பின் அமைதி என்பது போல உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.;
மீண்டும் மீண்டும் ஊரடங்கை சந்தித்துக் கொண்டிருக்கும் ஆசிய நாடுகளுக்கு மத்தியில் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீண்டு எழும் நாடாக தென் கொரியா திகழ்கிறது. இந்த நாட்டின் மிகப் பெரிய தண்ணீர் பொழுதுபோக்கு பூங்கா, கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பின் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது. இந்தப் பூங்காவுக்குள் நுழைவதற்கே ஒரு ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து தங்களுக்கு காய்ச்சல் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இங்குள்ள தண்ணீர் விளையாட்டு மிதவைகளில் சமூக இடைவெளியுடன் மூன்று பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மிதவைகள் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படுகின்றன.இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எல்லாம் இதர ஆசிய நாடுகளுக்கு பாடம் எனலாம். கொரோனா வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியின் வெனிஸ் நகரம் கூட, தற்போது இயல்புக்கு திரும்பி இருக்கிறது. இந்த நகரின் முக்கிய வருமானமே சுற்றுலாதான் என்பதால் படகுப் போக்குவரத்தும் அருங்காட்சியகங்களும் உணவகங்களும் மது விடுதிகளும் பாதுகாப்பு விதிமுறைகளோடு இயங்கத் தொடங்கிவிட்டன.