உலகின் மிகச் சிறிய நவ்ரு தீவின் தற்போதைய துயரங்கள்

பத்தாயிரம் பேர் மட்டுமே வசிக்கும் உலகின் 3 வது மிகச் சிறிய தீவின் தற்போதைய துயரங்களை காணலாம்.

Update: 2018-09-06 10:27 GMT
உலகின் மிகச் சிறிய தீவு நவ்ரு. இந்த நாடு ஒரு காலத்தில் ''இனிமையான நாடு'' என சுற்றுலா பயணிகளால் வர்ணிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த நாடெங்கும் துயரங்கள் தான் நிறைந்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சட்ட விரோதமாக நுழைய முயலும் அகதிகள், இங்கு அடைக்கப்படுகின்றனர். ஆஸ்திரேலிய அரசினால் நவுராவில் நடத்தப்படும் தடுப்புக் காவல் முகாம்கள் தான் இவை.   

பசிபிக் பெருங்கடலில் வடகிழக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து 3000 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த நாட்டில் பத்தாயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆஸ்திரேலிய அரசால் நடத்தப்படும் இந்த தடுப்பு காவல் முகாம்கள் தான், இந்த சின்னஞ்சிறிய நாட்டிற்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 

மேலும், இந்த சிறிய நாட்டில், பாஸ்பேட் சுரங்கங்கள் மற்றொரு வருவாய் வளமாக இருக்கிறது. ஆனால், அடுத்த 30 ஆண்டுகளில் அதுவும் தீர்ந்து போய்விடும் என்று கணிக்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற நாடுகளின் உதவியை தான், இந்த நாடு நம்பி உள்ளது. இங்குள்ள தடுப்பு முகாம்களில், அகதிகள் சந்தித்து வரும் பிரச்சனை, சர்வதேச அளவில் விவாதப் பொருளாகி உள்ளது. காரணம், முகாம்களில் உள்ள சிறுவர்களுக்கு கூட தற்கொலை எண்ணம் அதிகமாக எழுவதாக கூறுகிறார்கள். 

இந்த முகாம்களில் உள்ள எட்டு வயது, பத்து வயது சிறுவர்களிடம் கூட தற்கொலை நடத்தையை பார்க்கிறோம் என, உளவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முகாம்களில் உள்ள மக்களின் வாழ்க்கை முற்றும் சிதைந்து இருக்கிறது. இந்த முகாம்களில் உள்ள பலர் உயிரிழந்து விட்டனர். இந்த பிரச்சினையில்,  கவனம் செலுத்தி வரும் மனித உரிமை கூட்டுக் குழு ஒன்று, ஆஸ்திரேலிய அரசு, இந்த முகாமில் உள்ள 110 அகதிகளின் குழந்தைகளை வேறு எங்காவது குடியேற்றம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளது. நவுராவில் உள்ள இந்த தடுப்பு முகாம்களில் மருத்துவ வசதிகள் போதுமான அளவில் இல்லை. 

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் தைவான், பப்புவா நியூகினியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவதாக, ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது. இந்த மக்களின் நலனுக்காக, ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் போராடி வருகின்றனர். ஒரு அற்புத தீவு துயரங்களின் இருப்பிடமாக மாறியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்