சாதி மறுப்பு திருமணத்தை பதிவு செய்ய வந்த பெண் கடத்தல் - சினிமா பாணியில் அதிர்ச்சி சம்பவம்

சாதி மறுப்பு திருமணத்தை பதிவு செய்ய வந்த பெண்ணை சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்றோரும் உறவினரும் தரதரவென இழுத்துச்சென்று காரில் கடத்த முயற்சித்த சம்பவம், நாகையில் அரங்கேறியுள்ளது.;

Update: 2021-10-12 19:02 GMT
சாதி மறுப்பு திருமணத்தை பதிவு செய்ய வந்த பெண்ணை  சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்றோரும் உறவினரும் தரதரவென இழுத்துச்சென்று காரில் கடத்த முயற்சித்த சம்பவம், நாகையில் அரங்கேறியுள்ளது.  

நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மதனும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச்  சேர்ந்த 22 வயது பாரதியும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மதனும், பாரதியும் வீட்டிற்கு தெரியாமல் திருச்சியில் இருந்து நாகப்பட்டினத்திற்கு, கடந்த 9ஆம் தேதி வந்துள்ளனர். பின்னர் நாகையில் உள்ள கோவிலில் பாரதிக்கு தாலிகட்டிய மதன், அவரை முறைப்படி பதிவு திருமணம் செய்வதற்காக நாகை, நீதிமன்றம் அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் அழைத்து வந்தார்.
 

இதையறிந்த பெண்ணின் பெற்றோர் உறவினர்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பாரதியும் மதனும், மாலையும் கழுத்துமாக ரிஜிஸ்டர் புத்தகத்தில் கையெழுத்து இட முயன்ற போது, தடுத்து நிறுத்திய பெண்ணின் பெற்றோர், சினிமா பட பாணியில் பெற்ற மகளை தரதரவென இழுத்து சென்றனர்.
 

அவர்கள் கொண்டு வந்த காரில் பாரதியை ஏற்ற முயன்றபோது, அவர் , காப்பாற்றுங்கள் என கூச்சலிடவே நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அந்த காரை மடக்கிப் பிடித்து, அந்த பெண்ணை மீட்டனர். 
 

பின்னர் அங்கு வந்த போலீசார், பெற்றோரிடம் இருந்து பெண்ணை மீட்டு, நாகை நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைத்தனர்.  இதனிடையே,  மதனும் அவரது பெற்றோரும் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து, தங்களுக்கு நேர்ந்தது சாதிமறுப்பு கொடுமை என கூறியும், பெண்ணை மீட்டு தாருங்கள் என புகார் கொடுத்தனர்.  இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்