60 வயதுக்கு மேற்பட்டோரிடம் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் - சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்
தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரிடம், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிகம் தயக்கம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.;
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமையில் ஜூலை மாதம் ஆய்வு நடத்தப்பட்டது.
* சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் உதவியுடன் குழு அமைக்கப்பட்டு மாவட்ட வாரியாக மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
* சென்னையில் தொற்று அதிகம் பாதித்த பகுதியில் உள்ள வீடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்தும், தடுப்பூசி செலுத்தியவர்கள் மனநிலை குறித்தும் பதிவு செய்யப்பட்டதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதன் முடிவில், தமிழகம் முழுவதும் 80.3 சதவீதம் ஆண்களும், 81.6 சதவீதம் பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19.7 சதவீதம் ஆண்களும், 18.4 சதவீதம் பெண்களும் தயக்கம் காட்டுவதாக தெரியவந்துள்ளது.நகர்புறத்தில் 82.5 சதவீதம் பேரும், கிராமப் புறங்களில் 79.7 சதவீதம் பேரும் உடனடியாக தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளனர்.
* வயது வாரியாக பார்த்தால், 18-44 வயதுடையர்களில் 83.1 சதவீதம் பேரும், 45 - 60 வயதுடையவர்களில் 81.8 சதவீதம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 72.4 சதவீதம் பேரும் தடுப்பூசி போட தயாராக உள்ளனர். இருப்பினும் 60 வயதுக்கு மேற்பட்டோர் பலரிடம் தடுப்பூசி போடுவதில் தயக்கம் உள்ளதாகவும்,
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.