புதுச்சேரியில் இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்

புதுச்சேரியில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.;

Update: 2020-08-25 02:48 GMT
புதுச்சேரியில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரத்திலிருந்து, செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. திங்கள் கிழமை இரவு 8 மணியிலிருந்து புதன்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. 

பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஊரடங்கு தளர்வின் காரணமாக, தமிழகம் முழுவதும், டாஸ்மாக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், தொழில்களையும் பாதுகாக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய கிளர்ச்சி இயக்கம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஒரு வாரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 25-26ம் தேதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

விநாயகர் சதுர்த்தி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த உத்தரவிட உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது. தமிழக அரசின் ஆணை செல்லும் என்ற உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. 

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 25-ஆம் தேதியன்று பிறந்தநாளை கொண்டாடும் தங்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நன்முத்திரை பதித்து வரும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடுழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார். இதேபோல், விஜயகாந்த்துக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு சட்ட மன்றத்திற்குள் குட்கா எடுத்து வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவை பெற்றனர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, கடந்த 12 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்