இயலாமையால் குற்றம்சாட்டுகிறது பாஜக - ஸ்டாலின்

தமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க.,தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.;

Update: 2020-08-24 16:31 GMT
செயற்குழு கூட்டத்தில் ஜே.பி.நட்டா, தங்கள் சொந்தக் கட்சிக்கு ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்குவதை விடுத்து திமுகவைத் தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாத்து - மக்களின் அடிப்படை சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக எமர்ஜென்சியை எதிர்த்து நின்று, ஆட்சியையே விலையாகக் கொடுத்த இயக்கம் தி.மு.க. என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மைகளை உரக்கச் சொல்லி, உரிமைகளை வலியுறுத்தினால் அவர்களை 'ஆன்ட்டி இண்டியன்' என்றும் 'தேசவிரோதிகள்' என்றும் முத்திரை குத்தும் மலிவான போக்கை பா.ஜ.க.வின் சில தலைவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும், அதற்கு நட்டாவும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்திருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளைத் திணிப்பது என தமிழகத்தின் நீண்ட நெடிய பண்பாட்டுக்கு எதிராகச் செயல்படும் கட்சியாக பா.ஜ.க. இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் அதுகுறித்து கேள்வி எழுப்பினால், தி.மு.க.,வை வளர்ச்சிக்கு எதிரான கட்சி என்றும், நாட்டு நலனுக்கு எதிராகத் தூண்டிவிடுகிற கட்சி என்றும் குற்றம்சாட்டுவது பா.ஜ.க. தலைமையின் இயலாமையையே காட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். ஜனநாயகத்திற்கு விரோதமாக, பன்முகத்தன்மைக்கு எதிராக, வளர்ச்சிக்குக் கேடு விளைவிக்கிற கட்சியாக பாஜக இருப்பதாவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பண்பாட்டிற்கும் - இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கும் ஜனநாயக மாண்புகளுக்கும் - அரசியல் சட்டத்திற்கும் ஒரே எதிரியாகத் திகழ்வது பாஜகதான் என்று அறிக்கையில் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்