விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்

முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது,ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.;

Update: 2020-08-22 05:06 GMT
முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி  நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சதுர்த்தி தினமான இன்று பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து, வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். 

மணக்குள விநாயகருக்கு தங்க கவச அலங்காரம் - பக்தர்கள் தரிசனம் 

புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு, சதுர்த்தியை கொட்டி தங்க கவச அணிவித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். 


சித்தி விநாயகர் கோயிலில் சதுர்த்தி பூஜை 

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் அமைந்துள்ள புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோயில் சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.  இடது பக்கம் தும்பிக்கைக்கு பதிலாக, வலது பக்கமாக தும்பிக்கை கொண்டுள்ள சித்தி விநாயருக்கு, இளநீர், பன்னீர், பால் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காட்டப்பட்டது. 

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு சிறப்பு பூஜை 

பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகருக்கு சதுர்த்தி விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட விநாயகருக்கு மந்திரங்கள் ஓதி  வழிபாடு நடத்தப்பட்டது. 

விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு வழிபாடு  - கோயில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்பு 

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள சிறு கோயில்களில், விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் யாருமின்றி, கோயில் அர்ச்சகர்கள் மட்டும் முககவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கலந்து கொண்டு பூஜைகள் செய்தனர். 


சுந்தர காந்தி விநாயகர் கோயிலில் வழிபாடு  - வழிபாட்டில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் 

ஊட்டி கோடப்பமந்தில் அமைந்துள்ள சுந்தர காந்தி விநாயகர் கோயிலில், சதுர்த்தி வழிபாடு எளிமையாக நடைபெற்றது. கணபதி ஹோமம் உள்ளிட்ட, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, மூலவர், உற்சவருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அரசு அறிவித்து பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து ஏராளமான பக்தர்கள் சுந்தர காந்தி விநாயகரை வழிபட்டனர். 

செல்வ விநாயகருக்கு வெள்ளி காப்பு - சமூக விலகலுடன் நின்று பக்தர்கள் தரிசனம் 

திருப்பூர் செல்வவிநாயகருக்கு வெள்ளி காப்பு அணிவிக்கப்பட்டது. அதிகாலையிலேயே பால், இளநீர் உள்ளிட்ட வாசன திரவியங்கள் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வெள்ளி காப்பு அணிவிக்கப்பட்டு, சந்தனம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்து, விநாயகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. 

உலர்ந்த பழங்களில் உருவான விநாயகர் சிலை  - கொரோனா மருத்துவமனையில் வைத்து வழிபாடு

குஜராத்தில் உலர்ந்த பழங்களைக்கொண்டு, மருத்துவர் ஒருவர் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார். சூரத்தில் வசிக்கும் மருத்துவர் அதிதி மிட்டல் என்பவர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக இந்த சிலை செய்துள்ளார். தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் பூஜைக்குப் பிறகு, உலர்ந்த பழங்கள், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார். 


வாடிக்கையாளர்களை கவர்ந்த சாக்லேட் விநாயகர் 

பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் சாக்லெட்டால் விநாயகர் சிலை செய்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மண் மற்றும் மெழுகால், வித விதமாக விநியாகர் சிலைகள் உருவாக்கப்பட்டு, பக்தர்கள் சதூரத்தி விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், லூதியானாவில் சாக்லெட்டால் செய்யப்பட்ட விநாயகர் சிலை, பக்தர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்