சிறுமிக்கு பாலியல் தொல்லை - சித்தப்பா கைது
தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த புவனேஸ்வரி தனது நெருங்கிய உறவினர்களுடன் சுற்றுலா சென்ற போது வேளாங்கண்ணியில் தங்கியுள்ளார்,. அப்போது புவனேஸ்வரியின் 13 வயது மகளுக்கு அவருடைய தங்கை கணவர் கோபிநாத் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து கோபிநாத் மீது புவனேஸ்வரி கொடுத்த புகார் போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டது,. இதனை தொடர்ந்து தலைமறைவான கோபிநாத்தை போலீசார் ஒராண்டாக தேடி வந்தனர்,. இந்த நிலையில் கோபிநாத் சொந்த ஊருக்கு வந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற நாகை போலீசார் கோபிநாத்தை சுற்றி கைது செய்தனர்,.
கோயில் வளாகத்தில் மது, கறி விருந்து - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ பக்தர்கள் அதிர்ச்சி
விருத்தசாலம் மணவாளநல்லூரில் அமைந்துள்ள கொளஞ்சியப்பர் கோயில் வளாகத்தில், மது, இறைச்சி சாப்பிட்ட விவகாரத்தில் 2 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கோயிலில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள கோயிலுக்கு வரும் ஊழியர்கள், இது போன்ற செயலில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். வீடியோவில் மான் இறைச்சி என பேசுவதால், கோவில் வளாகத்தில் உள்ள மான்கள் வேட்டையாடப்பட்டதா எனவும் சந்தேகம் எழுந்தது.
கோவில் வளாகத்தில் மது அருந்திய விவகாரம் - கோவில் ஊழியர்கள் பணியிடை நீக்கம்
இதற்கிடையே விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் வளாகத்தில் மது அருந்திய விவகாரம் தொடர்பாக, கோவிலின் பொறுப்பு மேலாளர் சிவராஜன், காவலர் சிவக்குமார் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து பக்தர்கள் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் இந்த அதிரடி
உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நோயாளியை கீழே தள்ளிவிட்ட மருத்துவமனை ஊழியர் -மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம்
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிவிட்ட மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ வேகமாக பரவிய நிலையில், ஊழியர் பாஸ்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து, சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், தகவலறிந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் உத்தரவின் படி, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் பாஸ்கரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.
நம்பிக்கை ஒன்றே வாழ்வதற்கு ஆயுதம்- ஆட்டோவை கடையாக மாற்றிய இளைஞர்
மதுரை வாடிப்பட்டி அடுத்த கோச்சடை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த அவர், ஊரடங்கு உத்தரவால் முடங்கிப் போனார். வருவாய் இன்றி தவித்த அவர், சற்றும் தாமதிக்காமல், பரிவோடு பாதுகாத்து வந்த ஆட்டோவை, வடைகடையாக மாற்றினார். நான்கு வடை 10 ரூபாய் என விற்கும் அவர், தற்போது வாழ்வாதாரத்தை மீட்டுள்ளார். இவரது நம்பிக்கை பலருக்கும் ஊக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்கொலைக்கு முயற்சித்தவர் மீட்ப - விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு
நெல்லை மேலாப்பாளையத்தில் இடப்பிரச்சனை காரணமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சித்த கணேசன் என்பவரை பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு காப்பாற்றினர்,. இது தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய வீரர்களை, பாராட்டும் விதமாக அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களின் பெயரை பிரதமரின் உயிர்காக்கும் விருதுக்காக பரிந்துரை செய்யவுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
வங்கியில் திடீர் தீ விபத்து - பொருட்கள் சேதம்
தஞ்சாவூர் அருகே காந்தி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இரவில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக, தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க முயன்றனர். வங்கி பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்ற வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், வங்கியில் இருந்த, கணினி, பணம் எண்ணும் இயந்திரம், மின் விசிறி ஆகியவை முற்றிலும் எரிந்தது. ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறப்பாக நடைபெற்ற ஆடி மாத பிரதோஷ வழிபாடு - பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
தஞ்சை பெரிய கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. பெருவுடையாருக்கும், நந்தி பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், தயிர், பால் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பெருமானுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா தடை உத்தரவால் பெரியகோவிலில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை, இதனால் பக்தர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது
கோயிலுக்குள் புகுந்து உண்டியல் திருட்டு - 2 கொள்ளையர் கைது- போலீசார் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை தூக்கி சென்ற 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். முகமூடி அணிந்த 2 மர்மநபர்கள் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை திருடி செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மணிகண்டன் மற்றும் முனியப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
சாலையை மறித்து நின்றிருந்த காட்டு யானை - வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காத்திருப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையை மறித்து நின்றிருந்த காட்டு யானையை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் அச்சமடைந்தனர். அஞ்செட்டி சாலையில் ஒற்றை காட்டுயானை நீண்ட நேரம் நின்றிருந்தது. இதனால் சாலையின் இரண்டு புறமும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் நீண்ட நேரம் காத்திருந்தனர். தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர். இதையடுத்து வாகன ஓட்டிகள் அச்சமின்றி சென்றனர்.
தடையை மீறி பிள்ளையார் சிலை வைத்து வழிபாடு - வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காத்திருப்பு
கும்பகோணத்தில் தடையை மீறி வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையை வழிபட போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் அனுமதிக்காததால் சிலை இடமாற்றம் செய்யப்பட்டது. கும்பகோணம் பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில், குருமூர்த்தி என்பவரது வீட்டு வாசலில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. தகவலறிந்த போலீசார் , வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க சிலை இடமாற்றம் செய்யப்பட்டது.
உப்பை தேடி வரும் புள்ளி மான் கூட்டம்
முதுமலை சரணாலயத்தில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ள நிலையில், அவைகளுக்கு பிடித்த உப்பை வனத்துறையினர் ஆங்காங்கே கட்டி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து உப்பை சாப்பிட வரும் புள்ளி மான்கள் கூட்டத்தை வனத்துறையினர் கண்டு மகிழ்ந்து வருகின்றனர். மேலும் முதுமலை தெப்பக்காடு சாலையில் அடிக்கடி மான்கள் சாலையை கடப்பதால் கேரளா கர்நாடக மாநிலத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்ள் கொண்டுவரும் வாகனங்கள் கவனமாக செல்ல வேண்டும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்,.
நாயின் வாயில் சிக்கிய எலும்பு துண்டு - எலும்பு துண்டை அகற்றிய ஆட்டோ ஓட்டுநர்
திருப்பூர், லட்சுமி நகர் பகுதியில், நாயின் வாயில் சிக்கிய எலும்பு துண்டை, ஆட்டோ ஓட்டுனர் அகற்றி உதவி செய்துள்ளார். லட்சுமி நகர் பகுதியில் நாய் ஒன்று வாயில் ஏதோ குத்திய நிலையில் சுற்றித் திரிந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரவணன் என்பவர், கட்டிங்பிளேடு கொண்டு நாயின் வாயில் சிக்கியிருந்த எலும்பு துண்டை அகற்றியுள்ளார். இந்நிலையில், அந்த ஆட்டோ டிரைவருடன் நாய் விளையாடும் காட்சி வலைதளங்களில் பரவி வருகிறது.
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்- திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது அம்பலம்
கோவை காரமடை அருகே திருமண ஆசைகாட்டி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். காளாம்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றிய 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த 19 வயதான ஜீவானந்தம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இருவரும் பலமுறை ஒன்றாக இருந்துள்ளனர். அண்மையில், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் ஜீவானந்தத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வீட்டின் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி - திருட முடியாமல் சிசிடிவியை உடைத்து தப்பிய போதை ஆசாமி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். அண்ணாநகர் பகுதியை சேர்ந்த வைத்தீஸ்வரன் என்பவர், வீட்டின் தரைத்தளத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் நிலையில், முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் போதை தலைக்கேறிய நிலையில், அங்கு வந்த மர்மநபர் ஒருவர், கடையின் கதவை உடைக்க முயன்று முடியாமல், வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைய முயன்றுள்ளர். அதுவும், முடியாததால், அங்கிருந்த சிசிடிவி கேமிராவை சேதப்படுத்தி சென்றுள்ளார். பின்னர், வைத்தீஸ்வரன் அளித்த புகாரின் பேரில், வாணியம்பாடி போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்