கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகியான செந்தில் வாசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த மற்றொரு நிர்வாகியான செந்தில் வாசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.;
கந்த சஷ்டி பற்றி அவதூறு கருத்தை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் என்கிற யூடியூப் சேனல் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப் பிரிவினர் வழக்கு பதிவு செய்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகி செந்தில் வாசனை வேளச்சேரியில் வைத்து கைது செய்தனர். மேலும் அந்த வீடியோவில் உரையாற்றிய சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இருவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மறைமலை நகரைச் சேர்ந்த குகன், மற்றும் சென்னை ஓட்டேரியை சேர்ந்த சோமசுந்தரம் ஆகிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், செந்தில் வாசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். நேற்று சுரேந்திரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.