சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் மோசடி - மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் 49 கோடி ரூபாய் பணத்தை, தனிநபர் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் 100 கோடி ரூபாய் பணத்தை சென்னையில் உள்ள இந்தியன் வங்கி கிளை ஒன்றில் முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், துறைமுக பொறுப்பு கழகத்தின் அதிகாரி எனக் கூறி வங்கி கிளைக்கு வந்த நபர், 50 கோடியை நிலையான வைப்பு நிதியில் வைக்கவும், 50 கோடியை நடப்பு கணக்கில் வைக்கவும் அதற்கான ஆவணங்களை கொடுத்து புதிய கணக்கில் தொகையை மாற்றிவிடும் படி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து துறைமுக பொறுப்பு கழகத்தின் அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்ததால் அந்த அதிகாரி தெரிவித்த கணக்கிற்கு 100 கோடி பணத்தை மாற்றியுள்ளனர். இதையடுத்து அந்த கணக்கில் இருந்த 49 கோடி ரூபாய் வெவ்வேறு வங்கியில் உள்ள பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்தியன் வங்கி அதிகாரிகள், விசாரித்து பார்த்ததில் போலி ஆவணங்களை தயாரித்து வந்து, அதிகாரி போன்று ஆள்மாறாட்டம் செய்த நபர் பணத்தை மோசடி செய்தது அம்பலமானது. உடனடியாக மாற்றப்பட்ட கணக்கில் மீதமிருந்த 51 கோடியை வங்கி அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இந்த மோசடி தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுக்கப்பட்டு, சிபிஐ - விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். எனினும் மோசடி செய்யப்பட்ட தொகை 49 கோடி என்பதால், இந்த வழக்கை சிபிஐ - வங்கி மோசடி தடுப்பு பிரிவுக்கு பரிந்துரை செய்து தற்போது விசாரணை தொடங்கி உள்ளது.