தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியது - அதிகாரிகள் ஆலோசனை

தேர்தல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Update: 2018-09-01 02:34 GMT
தேர்தல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள்  பங்கேற்றனர். இதனிடையே தமிழகத்தில் 4 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியலின் படி 5 கோடியே 86 லட்சம் வாக்காளர்கள் இருந்ததாகவும், ஆனால் இறப்பு, இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் பெயர் நீக்கம் செய்யப்பட்ட பிறகு, தற்போது செப்டம்பர் 1ம் தேதியிட்ட தீவிர சிறப்பு சுருக்க முறை திருத்த வாக்காளர் பட்டியலின் படி 4 லட்சம் வாக்காளர்கள் குறைந்து தற்போது 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி 11ஆம் தேதி முதல் இன்று வரை ஒரு லட்சத்து 82 ஆயிரம் புதிய வாக்காளர்கள் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளதாகவும், இங்கு 6 லட்சத்து 7 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், சேர்த்தல், திருத்தல் உள்ளிட்டவற்றை செய்ய செப்டம்பர் 9, செப்டம்பர் 23, அக்டோபர் 7 மற்றும் அக்டோபர் 14 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் 1.1.2019 அன்று 18 வயது நிறைவடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்