ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மத்திய மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகிறது - ஸ்டாலின் கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க, மத்திய - மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-09 07:58 GMT
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க, மத்திய - மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் மாசுக்கு, ஸ்டெர்லைட் மட்டுமே காரணமல்ல என நிலத்தடி நீர் வாரியம் மூலம் ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆலையை திறப்பதற்கு துணை போகும் வகையில், இப்படியொரு ஆய்வை மேற்கொண்டிருப்பது, தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனியார் கார்ப்பரேட் ஆலைக்காக, ஏழரை கோடி மக்களின் நலனை, மத்திய பாஜக அரசு தூக்கியெறிந்து செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் தங்களுக்கு தெரியாமல் ஆய்வு நடந்தது போல தலைமை செயலாளர் மூலம் மத்திய அரசுக்கு கடிதம் எழுத வைத்திருப்பதன் மூலம், ஆலையைத் திறப்பதில், மத்திய - மாநில அரசுகள் உள்நோக்கத்துடன் செயல்படுவது தெளிவாக தெரிவதாக அறிக்கையில் ஸ்டாலின் ​​தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மாநில அரசின் பிரதிநிதிகளே இல்லாமல் ஒரு கமிட்டியை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைப்பதை கைகட்டி வேடிக்கை பார்த்தது அ.தி.மு.க அரசு எனக் கூறியுள்ள அவர் "நீர் ஆய்வு" அறிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆய்வு அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை பெற வேண்டும் எனவும், அந்த அறிக்கையை அமைச்சரவை கூட்டத்தில் நிராகரிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்