எதிரெதிர் திசையில் அதிமுக- பாஜக.. நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
பதிவு: ஜூலை 16, 2018, 03:30 PM
வழக்கம் போல இப்போதும் நாடாளுமன்ற தேர்தல் வேலைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டது அ.தி.மு.க. மதுரையில் பிரச்சாரம் துவங்கி விட்டதாக முதலமைச்சர் அறிவித்த நிலையில் அக்கட்சியின் நிலைப்பாடு, கூட்டணி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு

ஜெயலலிதா இருந்தபோது பெரும்பாலும் கூட்டணி, பிரச்சாரம் என தேர்தல் களத்தை அ.தி.மு.க.தான் சூடேற்றும். அதே பாணியில் இப்போது முதலமைச்சரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் துவங்கி விட்டதாகவே மதுரையில் பேசியிருக்கிறார். 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகங்களை வகுக்க அதன் தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வந்து, ஊழல் நிறைந்த மாநிலம் என தமிழகத்தை வர்ணித்து விட்டுப் போனார். இந்தப் புள்ளியில் இரு கட்சிகளுக்கும் கருத்து வேறு பாடு துவங்கியது.

அமித்ஷாவின் ஊழல் விமர்சனத்துக்கு தமிழக அமைச்சர்கள் பெருந்தன்மையாக விளக்கம் கொடுத்து வந்த நிலையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அரசு வட்டாரத்துக்கே எச்சரிக்கை விடுக்கும் வார்த்தைகளை பிரயோகித்தார்.

பா.ஜ.க.வின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது, இரு கட்சிகளுக்கும் மறைமுக கூட்டணி என்ற எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஜெயக்குமாரின் பதில் முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவே தெரிகிறது. இந்த இரு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர் எதிர் திசையில் இருக்கும் என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் இந்த நிமிட கணிப்பு.