ஒரு இளைஞன்.. 2 காதலிகள்.. பூவா? தலையா? போட்டி நடத்தி முடிவு
2 பெண்கள்.. ஒரு காதலன்... திருமணம் செய்து கொள்ள அடம் பிடித்த பெண்களை பூவா? தலையா? போட்டு பார்த்து ஊர் பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கிய சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது....;
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகாவை சேர்ந்த 2 பெண்கள் ஒரே இளைஞரை காதலித்து வந்துள்ளனர். அந்த இளைஞரும் சளைக்காமல் இவர்கள் 2 பேரையும் காதலித்து வந்துள்ளார். யாரை திருமணம் செய்து கொள்வது என்ற கேள்வி எழுந்த போது தான் பிரச்சினையும் கூடவே கிளம்பியது. காதலனை நான் தான் திருமணம் செய்து கொள்வேன் என 2 பெண்களும் அடம்பிடித்த படி இருக்கவே காதல் பிரச்சினை ஊர் பிரச்சினையாக மாறிப்போனது. ஊர் பெரியவர்கள் இதில் தலையிட்டு சமாதானம் செய்த போதிலும் அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்வதாயில்லை... காதலனை கட்டிக் கொள்வதில் தீவிரமாக இருந்த 2 பேரும் ஒரு கட்டத்தில் ஊர் பஞ்சாயத்தினர் முன்பாக வந்தனர்.
அப்போது கிரிக்கெட் போட்டியில் செய்வது போல பூவா? தலையா? போட்டு பார்க்க உள்ளதாகவும், அதில் யார் வெற்றி பெறுகிறாரோ அவருக்கே காதலனுடன் திருமணம் என கூறவே பெண்களும் சம்மதித்தனர். பின்னர் டாஸ் போட்டு பார்த்ததில் ஒரு பெண் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு காதலனை திருமணம் செய்து வைக்க ஊர் மக்கள் முடிவெடுத்தனர். ஆனால் தோல்வியடைந்த மற்றொரு பெண்ணோ, தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டல் விடுத்தார். அந்த பெண்ணை அழைத்த மணமகள், பேச்சுவார்த்தை நடத்தி ஒரு கட்டத்தில் கட்டியணைத்து அன்பை பொழிந்தார். ஆனாலும் மனம் பொறுக்க முடியாத அந்த பெண், ஒரே நேரத்தில் 2 பேரிடம் காதல் ரூட் விட்ட காதலனுக்கு பளார் என ஒரு அறை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
பின்னர் இந்த ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது எந்த வித சலனமும் இன்றி ஜாலியாக இருந்தார் மாப்பிள்ளை. இந்த விவகாரம் போலீசாரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சமரசமான முறையில் இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவரவே போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் கர்நாடகாவில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாயிருக்கிறது....