ராஜஸ்தானில் 200 தடுப்பணைகளைக் கட்டியுள்ள அம்லா ரூயா
பதிவு: ஜூலை 07, 2018, 02:50 PM
* இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தான் , வறட்சியிலும் மிகப் பெரியதாகவே, காணப்படுகிறது.  

* ஆனால், அம்லா ரூயாவும் (Amla Ruia) அவரது ஆகார் தொண்டு நிறுவனமும், இருக்கும் வரை பிரச்சினையில்லை என்றே, பொது மக்கள் கருதுகின்றனர்... 

* கடந்த 10 ஆண்டுகளில், சுமார் 200க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டியுள்ள Aakar Charitable Trust, 115க்கும் மேற்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளன. சுமார் 2 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 

* நீர்த் தேக்கம் போல், நீரை தேக்கி வைக்கக்கூடிய நிலப் பகுதிகளைக் கண்டுபிடிப்பதற்காக, உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது, இந்த தொண்டு நிறுவனம்.

* புதியதாக உருவாக்கப்படும் நீர்த்தேக்கங்களுக்கு பதிலாக, மலைப்பாங்கான பகுதிகளின் இயற்கையான நிலப்பகுதிகளை பயன்படுத்தி. அதற்கேற்றாற்போல் சரிவான பகுதியை கட்டமைக்கின்றனர். நீரை தேக்கிவைக்கும் பகுதிகளை பலப்படுத்தி, இந்த ஓரளவு இயற்கையான நீர்ப் படுகைகளில் நீரைச் சேமித்து வைக்கின்றனர்.

* பருவ மழை வரும்போது, தடுப்பணைகள் நிரம்பினால், கிராமங்களுக்கு அருகிலுள்ள நீர் நிலைகளிலும், கிணறுகளிலும், உபரி நீர் சேகரிக்கப்படுகிறது. இந்த நீர், வறண்ட காலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இவை, குறைந்த செலவில் கட்டப்படுபவை ஆகும். 

* இது, புதிய தீர்வல்ல, நமது முன்னோர்களால் கடைப் பிடிக்கப்பட்டு வந்ததே என்கிறார் அம்லாரூயா.

* தடுப்பணைகளை உருவாக்க, 60 சதவீத ஆதாரங்களை வழங்கும் இந்த தொண்டு நிறுவனம், மீதமுள்ள 40 சதவீத நிதியை, உள்ளூர் மக்களிடம் திரட்டி விடுகின்றனர். ஆரம்பத்தில், நிதி தர தயங்கிய உள்ளூர் வாசிகள், பின்னர் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டனர். 

* மக்களின் வாழ்க்கையில் வியக்கத்தக்க மாற்றங்களை, இந்த தொண்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. 

* டேங்கர் மூலம் தண்ணீரைப் பெற்று வந்த விவசாயிகள், இப்போது முப்போகம் விளைவிப்பதுடன், கால்நடைகளையும் பராமரிக்கின்றனர்.

* குடிநீருக்காக, தொலைதூரம் செல்லவேண்டியிருந்ததால், வீட்டிலேயே இருந்த சிறுமிகள், தற்போது பள்ளி செல்ல முடிகிறது.

* ஆகார் தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளூர் மக்களுடன் இணைந்து, ஆண்டுதோறும் சராசரியாக 30 தடுப்பணைகளை கட்டி வருகிறது, ஆனால், இதை மூன்று மடங்காக அதிகரித்து ஆண்டுக்கு 90 தடுப்பணைகள் உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறார் அம்லா ரூயா.

* உத்திரபிரதேசத்தில் பிறந்த இவர், ராஜஸ்தான் மட்டுமின்றி, சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவிலும், தமது சேவையை தொடர்ந்துள்ளார். இவரை, Water Mother என்றழைக்கின்றனர்.

* அம்லா ரூயாவுக்கு சுமார் 72 வயதாகிறது. தமக்கு 90 வயதாகும் போதும் தடுப்பணைகளை கட்டிக் கொண்டிருப்பேன் என்கிறார்.