அமர்நாத் யாத்திரை, ஜூன் 28 ம் தேதி தொடக்கம்

அமர்நாத் யாத்திரை, ஜூன் 28 ம் தேதி தொடக்கம்

Update: 2018-06-18 07:29 GMT
5 ஆயிரம் ஆண்டு பழமையான குடவரை கோயிலான, அமர்நாத் ஆலாயம், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருக்கிறது. இங்கு பனி லிங்கம் வடிவில் சிவ பெருமான் காட்சியளிக்கிறார். மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை பனி லிங்கம் உருவாகும். 

இந்து சமய புராணங்களின் கூற்றுப்படி,  இங்குதான் சிவ பெருமான் தனது வாழ்க்கை ரகசியங்களை பார்வதிக்கு கூறியதாக சொல்லப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு எளிதில் செல்ல முடியாது. 

ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி 60 நாட்கள் வரை பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முன் பதிவு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கியது. இதுவரை 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 

வருகிற 28 ந் தேதி தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 26 ந் தேதியுடன் நிறைவடையும். அதுவரை, தினமும் 7 ஆயிரத்து 500 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள். செல்லும் வழி நெடுகிலும், தீவிரவாதிகள் அபாயம் இருப்பதால் ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்பு உண்டு.  

ஆபத்து நிறைந்த இந்த யாத்திரையில் இஸ்லாமியர்களும் பங்கேற்கின்றனர். பனி லிங்க வடிவில் சிவபெருமான் காட்சி தருவதாக முதன் முதலில் பார்த்து சொன்னதே, ஒரு இஸ்லாமியர்' என்றும் கூறப்படுகிறது.


ஸ்ரீநகரில் இருந்து பாகல் காவ் வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து நடைபயணமாக புறப்பட வேண்டும். வழியில் சந்தன்வாடியில் தங்கிச் செல்ல வேண்டும். மலை மீது ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்பதால்  மருத்துவ குழுவும் தயாராக இருக்கும். 

வாழ் நாளில் ஒரு முறையாவது அமர்நாத் யாத்திரை செல்ல வேண்டும் என்பது இந்துக்களின் மிகப்பெரிய விருப்பம். இந்த ஆண்டும், 'ஹர ஹர மகாதேவ்', `ஜெய் போலேநாத்'  என்ற கோஷங்களுடன் யாத்திரையை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர், அமர்நாத் பக்தர்கள்.
Tags:    

மேலும் செய்திகள்