சமூக வலை தளங்களில் பிரபலமாகும் தந்தூரி டீ
பதிவு: ஜூன் 09, 2018, 11:04 AM
தந்தூரி சிக்கனை ருசிக்காதவர்கள் இருக்க முடியாது... அது ஒரு தனிச் சுவை தான்... தந்தூரி உணவு வகைகளை ஒரு கட்டுக் கட்டுபவர்கள் நிறைய பேர் உண்டு... அவர்களுக்கு மட்டுமல்ல, டீ பிரியர்களுக்கும் இது, தித்திப்பான செய்தி தான்... 
மசாலா டீ, லெமன் டீ, இஞ்சி டீ, பிளாக் டீ என்ற வரிசையில் இணைந்திருக்கிறது தந்தூரி டீ... மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள ஒரு டீக்கடையில், தந்தூரி டீயை சுடச்சுட வழங்கி வருகின்றனர். இது டீ பிரியர்களின் நாக்கை சப்புக் கொட்ட வைத்துள்ளது. இது தொடர்பான தகவல்களும், சமூக வலை தளங்களில், வேகமாக பரவி வருகிறது.

இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்த பானங்களில் முக்கியமானது டீ என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதிலும் மசாலா டீ, தனிச்சிறப்பாகும். இதுபோல புதுப்புது வகையான டீயை கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில், புனே நகரின் கராடி பகுதியைச் சேர்ந்த 'சாய் லா' என்ற கடை, தந்தூரி டீயை வாடிக்கையாளர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்த டீ புது விதமான சுவையுடன் இருப்பதால், ஏராளமான டீ பிரியர்கள் அந்தக் கடையில் குவிந்து வருகின்றனர்.

இந்த டீயை எப்படி தயாரிக்கிறார்கள்...? என்ற ஆவல் அதிகரித்துவிடுகிறது... தந்தூரி அடுப்பில் சிறிய களிமண் பானையை வைத்து, நன்கு சூடான பின்பு, அதில் பாதியளவு சூடாக்கப்பட்ட டீயை ஊற்றுகின்றனர். நன்கு கொதித்து நுரை தள்ளி வரும்போது, அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர்.

வாடிக்கையாளர்களின் விருப்பப்படி, பன் அல்லது பிஸ்கட்டுடனும் தந்தூரி டீயை வழங்குகின்றனர். 125 மி.லி கொண்ட ஒரு கப் டீ, வெறும் 20- ரூபாய்க்கு கிடைக்கிறது. இது, தந்தூரி உணவைப் போல மிகவும் சுவையாக, மண் வாசனையுடன் இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு மட்டும்தான் இதுபோன்ற டீ வழங்கப்படுகிறது. எனவே, உலகின் முதல் தந்தூரி டீ என, இதன் உரிமையாகள் கூறிக்கொள்கின்றனர். 

பட்டதாரிகளான பிரமோத் பங்கர் (Pramod Bankar) மற்றும் அமோல் திலிப் ராஜ்தியோ (Amol Dilip Rajdeo) ஆகிய இருவர்தான் இந்த கடையின் உரிமையாளர்கள். 

கிராமத்தில் உள்ள இவர்களது பாட்டி, புதுவிதமாக பால் காய்ச்சியதைப் பார்த்தவர்கள், இதை அடிப்படையாகக் கொண்டு தந்தூரி டீயை தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபற்றி கேள்விப்பட்ட வெளி மாநிலத்தவர்களும் இங்கு வரத் தொடங்கி உள்ளனர். இந்த டீயை குடித்தவர்கள், தந்தூரி டீயின் அருமை பெருமைகளை சமூக வலைதளங்களில் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது.