பதவி நீக்கப்படுவாரா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ?

பிரிட்டனில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், இந்த கோரிக்கை எழுவதற்கான காரணம் என்ன...?
x
பிரிட்டனில் கடந்த 2020 மே மாதம் கொரோனா முதல் அலையில் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்த போது, பிரதமர் போரிஸ் ஜான்சன் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மது விருந்து நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மக்கள் செத்துக்கொண்டிருந்த வேளையில் விதிகளை மீறி பிரதமர் மது விருந்து நடத்தியிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன. 

இந்த விவகாரத்தில் போரிஸ் ஜான்சன் பொறுப்பின்றி செயல்பட்டதாக குற்றம் சாட்டிய எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. 

பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த போது போரிஸ் ஜான்சன், மது விருந்து நடத்திய தற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் பொய்கள் மற்றும் சாக்குப்போக்கு கூறியதால் இப்போதே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

இது குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்ற போது, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் அவரது சொந்த கட்சி உறுப்பினர்களும் கூட போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். 

ஆனால் முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்ட போரிஸ் ஜான்சன், சூ கிரேவின் (sue Gray) அறிக்கைக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

அந்நாட்டு உயர்மட்ட அரசு அதிகாரியான சூ கிரே, பிரதமர் நிகழ்ச்சியின் போது விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறார். 

அவருடைய அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டதும் தனிப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மறுபுறம் அவருடைய சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் 20 பேர் வரையில், போரீஸ் ஜான்சன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமாறு கட்சியின் தலைமை கமிட்டிக்கு கடிதம் எழுதியுள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளன. 

கன்சர்வேட்டிவ் கட்சி விதிகள்படி சொந்த கட்சி எம்.பி.க்களே பிரதமர் மீது கட்சி ரீதியாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். இதற்கு 54 எம்.பி.க்கள் கடிதம் கொடுக்க வேண்டும். 

வரும் நாட்களில் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக இன்னும் சில எம்.பி.க்கள் கடிதம் எழுதுவார்கள் என கூறப்படுகிறது. 

எனவே பிரிட்டன் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் தொடருவாரா? என்பது விசாரணை அதிகாரி சூ கிரேவின் அறிக்கை மற்றும் சொந்த கட்சியினரின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்தே இருக்கும் எனக் கூறப்படுகிறது.




Next Story

மேலும் செய்திகள்