யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.
x
2020ல் கொரோனா தாக்கிய போது நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடியது வடகொரியா. இதனால் பொருளாதார சரிவு, உணவு தட்டுப்பாடு, பசி, பட்டினி என இன்னல்களை சந்தித்தனர். ஏன் இன்னமும் வடகொரியா பஞ்சத்தால் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இத்தனை உள்நாட்டு பிரச்னைகள் இருந்தாலும், ஏவுகணை சோதனையை மட்டும் வடகொரியா விட்டப்பாடில்லை. 

நீர் மூழ்கி கப்பலில் இருந்து சோதனை, ஓடும் ரயிலில் இருந்து சோதனை என கடந்த ஆண்டு பல ஏவுகணை சோதனைகளை மேற்கொண்ட வடகொரியா, 2022 புத்தாண்டில் முதல் நாடாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை நடத்தி முடித்துள்ளது.

கிழக்கு கடல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனையில், 500 கிலோ மீட்டர் தூரம் இலக்கை தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்ததாக அறிவித்தது வடகொரியா. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியிருந்த வடகொரியா, அதைவிட சக்தி வாய்ந்த ஏவுகணையை தற்போது வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது.

அதிலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஐநா அமைப்பு ஆகியவை தொடர்ந்து பொருளாதார தடை விதித்தாலும், அதை எல்லாம் பொருட்டாக மதிக்காமல் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்கிறது.

குறிப்பாக அமைதி பேச்சுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தாலும், ஏவுகணை சோதனைகளை மீண்டும் மீண்டும் செய்து அமெரிக்காவை கோபமடைய வைக்கிறது வடகொரியா. அமைதியை நிலைநாட்டுங்கள் என ஐ.நா தெரிவித்தால், ராணுவத்தை பலப்படுத்துவதாக நினைத்து ஏவுகணை சோதனை மேற்கொள்கிறது

உலக நாடுகள் கொரோனாவிற்கு எதிராக போரிட்டுக்கொண்டிருக்க, யார் எதிரி என்றே தீர்மானிக்காமல் வடகொரியா ஆயுதப் போருக்கு தயாராகி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன!






Next Story

மேலும் செய்திகள்