லிபியாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தல் - கடாஃபியின் மகன் அதிபர் தேர்தலில் போட்டி : மக்கள் மத்தியில் பரபரப்பு

லிபியாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் கடாஃபியின் மகன் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லிபியாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தல் - கடாஃபியின் மகன் அதிபர் தேர்தலில் போட்டி : மக்கள் மத்தியில் பரபரப்பு
x
லிபியாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் கடாஃபியின் மகன் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் அடுத்த மாதம் 24ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மறைந்த சர்வாதிகாரி கடாபியின் மகன் செயிஃப் அல் இஸ்லாம் போட்டியிட உள்ளதாகவும், அதற்காக தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து செயிஃப் அல் இஸ்லாம் பேசிய வீடியோ ஒன்றை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். அதில் நாட்டின் எதிர்காலத்திற்கன பாதையைக் கடவுள் தீர்மானிப்பார் என்று செயிப் குறிப்பிட்டுருந்தார். செயிப் அல் இஸ்லாம் தேர்தலில் போட்டியிடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் - ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு

ஆஸ்திரியாவில் கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மட்டும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2வது தவணையை செலுத்தாமல் உள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கு மட்டும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத் - "நல்ல உடல் நலத்துடன் உள்ளார்" - போரிஸ் ஜான்சன் தகவல்

இங்கிலாந்து அரசி 2ம் எலிசபெத் நலமுடன் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இரு உலகப் போர்கள் மற்றும் அதற்குப் பிந்தைய போர்களில் பிரிட்டன் மற்றும் காமன்வெல்த் படைகள் ஆற்றிய சேவையை நினைவு கூற நடைபெற்ற  போர் நினைவு நாளில் முதுகில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக  எலிசபெத் பங்கேற்கவில்லை. அவர் சார்பில் மலர் வளையம் மட்டும் வைக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய போரிஸ் ஜான்சன், தான் கடந்த வாரம் எலிசபெத்தை சந்த்தித்ததாகவும், அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஈரானில் சக்தி வாய்ந்த 2 நிலநடுக்கங்கள் - மின் கம்பம் சாய்ந்து ஒருவர் பலி

ஈரானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பந்தர் அப்பாஸ் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.3 மற்றும் 6.4 ஆகப் பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இதில் மின்கம்பம் விழுந்து ஒருவர் உயிரிழந்தார். சேதம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆளும் கவுன்சில் - முதல் ஆளும் கவுன்சில் கூட்டம்

சூடானில் புதிதாக அமைந்துள்ள ஆளும் கவுன்சில் நடத்திய கூட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். இந்த பதட்டமான சூழலிலும், இராணுவத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபதா அல் புரான், முதலாவது ஆளும் கவுன்சில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டனர். பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கும் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியூபா அரசுக்கு எதிராக பேரணி - அமெரிக்காவில் பேரணியில் ஈடுபட்ட மக்கள்

அமெரிக்காவின் மியாமி நகரில் கியூப அரசுக்கு எதிராக ஏராளமானோர் பேரணியாக சென்றனர். கியூபாவின் சிறைகளில் உள்ள சமூக ஆர்வலர்களை விடுவிக்கக் கோரியும், அரசியல் சுதந்திரம் அளிக்கக் கோரியும் இந்த பேரணி நடைபெற்றது. பேரணியில் கியூப அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பங்கேற்ற மக்கள், கியூப அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

லிவர்பூலில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் - ஒருவர் பலி-ஒருவர் படுகாயம்; 3 பேர் கைது

இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகரில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்வில் ஒருவர் உயிரிழந்தார். வடக்கு இங்கிலாந்தில் உள்ள லிவர் பூல் நகரில் இருக்கும் மகளிர் மருத்துவமனைக்கு வெளியில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒரு ஆண் உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 3 பேர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

8 புலம் பெயர்ந்தோரின் உடல்கள் மீட்பு - கெனரி தீவு அதிகாரிகள் தகவல்

ஸ்பெயின் நாட்டின் கெனரி தீவுகளுக்கு அருகே 8 புலம் பெயர்ந்தோரின் உடல்கள் கண்டறியப்பட்டன. கடலில் மிதந்து கொண்டிருந்த கப்பலில் 8 பேரின் உடல்களைக் கண்டெடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 62 புலம்பெயர்ந்தோர் பத்திரமாக மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்