ரஷ்யாவில் உச்சமடையும் கொரோனா - தினசரி தொற்றுதல் 40,096ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனா தொற்றுதல்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
14 கோடி மக்கள் தொகை கொண்ட ரஷ்யாவில் இதுவரை கொரோனாவிற்கு 2.31 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில வாரங்களாக தினசரி தொற்றுதலின் அளவு, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. வியாழன் அன்று 40,096 புதிய தொற்றுதல்கள் பதிவாகி, புதிய உச்சத்தை எட்டியது. அன்று ஒரே நாளில் 1,159 பேர் கொரோனாவிற்கு பலியாகினர்.
இதைத் தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர இதர நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடைகள், உணவு விடுதிகள், பள்ளிகள், கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டுள்ளன. ஸ்புட்னிக் வி உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ள ரஷ்யாவில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதுவரை 32 சதவீதத்தினருக்கு மட்டுமே இரண்டு டோஸ்
தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரையில் நாடு தழுவிய அளவில், பொது விடுமுறை அளிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கடந்த வாரம் அறிவித்திருந்தார். ஆனால் இந்த 7 நாட்களுக்கு பொது மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று ஆணையிடப்படாததால், பலரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கருங்கடல் பகுதியில் உள்ள சோச்சி என்ற சுற்றுலா தளத்திற்கு ஏராளமானவர்கள் வர உள்ளதாக அந்நகரின் மேயர் எச்சரித்துள்ளார். எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளுக்கும் செல்லும் விமானங்களின் டிக்கெட்டுகள் அனைத்தும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட மக்கள் முன்வர வேண்டும் என அரசு தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
Next Story

