தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய அதிபர் மீது வழக்குகள்

கொரோனா பெருந்தொற்றைக் கையாண்டதில் அலட்சியமாக செயல்பட்டு வந்த பிரேசில் அதிபர் பொல்சனரோவுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய அதிபர் மீது வழக்குகள்
x
உலகமே கொரோனாவை அரக்கனாகப் பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அது வெறும் காய்ச்சல்...அல்லது அதுவும் கூட இல்லாமல் இருக்கலாம் என்று வைரசை தூசு போல் எண்ணி சர்ச்சைக் கருத்து வெளியிட்டவர் பிரேசில் அதிபர் பொல்சனரோ...

கொரோனாவால் ஏற்படும் அழிவு பொருளாதார காரணங்களுக்காக மிகைப்படுத்தப் பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மனிதர்கள் முதலையாக மாறி விடலாம் என்றும், பெண்களுக்கு தாடி வரலாம் என்றும் கேலியான கருத்துக்களையே தெரிவித்து வந்தார்...

ஆரம்பம் முதலே கொரோனா ஒரு பொய் என்பதைப் போலவும், தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டிருந்த பொல்சனரோ, மக்களை முகக்கவசம் அணியாமல் வெளியே வர வேண்டும் என்பது போன்ற கருத்துக்களையே கூறி வந்ததால், உலக சுகாதார அமைப்பு அவரைக் கடுமையாகக் கடிந்து கொண்டது...

உலகமே எதிர்த்து நின்றாலும் தனது நிலைப்பாட்டில் சிறிதும் மாறாமல் நிலை கொண்டிருந்த பொல்சனரோவையே ஆட்டிப் பார்த்துள்ளது அவர் மீது பாயவுள்ள சட்ட நடவடிக்கை...

பிரேசில் நாட்டில் இதுவரை 6 லட்சத்து 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ள நிலையில், 2 கோடியே 17 லட்சத்து 48 ஆயிரத்து 984 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்...

பெருந்தொற்றை மிகவும் மோசமாகக் கையாண்ட நாடுகளில் ஒன்றாக பிரேசில் மாறியதற்கு அனைவரும் கை காட்டும் ஒரே நபர் பொல்சனரோதான்...

பிரேசில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக அவர் மீது குற்றவியல் வழக்குகள் தொடர சிறப்பு நடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது...

கொரோனா பெருந்தொற்றை அதிபர் பொல்சனரோ தலைமையிலான அரசு மிகவும் மோசமாக கையாண்டதால்தான் உயிரிழப்புகள் அதிகரித்தனவா என்பது குறித்து விசாரிக்க சிறப்பு நாடாளுமன்றக் குழு 6 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது...

இந்நிலையில், பொல்சனரோ மீது பல்வேறு குற்றவியல் வழக்குகளை தொடர அரசு தலைமை வழக்கறிஞர் அகஸ்டோவை வற்புறுத்தும் அறிக்கையை சிறப்புக் குழு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது...

இது தொடர்பான் வாக்கெடுப்பில் அறிக்கைக்கு ஆதரவாக 7 பேரும் எதிராக 4 பேரும் வாக்களித்துள்ளனர்...

மந்தை எதிர்ப்பு சக்தியை அடைய கொரோனாவை நாடு முழுக்க பரவ விடும் கொள்கையைக் கடைப்பிடித்தது... மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்தது... பழங்குடியின மக்களுக்கு எதிரான இனப்படுகொலை உட்பட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பொல்சனரோ மீது சுமத்தப்பட்டுள்ளது...

மேலும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதுடன், வைரஸ் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாகவும் அதிபர் பொல்சனரோ மீது பழி சுமத்தப்பட்டுள்ளது...

இது தொடர்பாக சுமார் ஆயிரத்து 200 பக்க அறிக்கை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது...

ஆனால் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அதிபர் பொல்சனரோ திட்டவட்டமாக மறுத்துள்ளார்...

இந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று அவர் மீது வழக்கு தொடரத் தேவையா... இல்லையா என்பதை அகஸ்டோ தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது...

ஆனால் பொல்சனரோவால் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அகஸ்டோ, பொல்சனரோவுக்கு ஆதரவாகவே முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது...

சிறப்பு நாடாளுமன்றக்குழு அளித்துள்ள பரிந்துரைகளை அலசி ஆராய்ந்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அகஸ்டோ தரப்பு தெரிவித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்