மாறி மாறி தொழிலதிபர்களை விடுவித்த சீனா, கனடா - முடிவுக்கு வந்த இரு நாட்டு மோதல்

ஹுவெய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை கனடா விடுதலை செய்ததை தொடர்ந்து, இரண்டு கனடா நாட்டினரை சீனா விடுவித்துள்ளது.
மாறி மாறி தொழிலதிபர்களை விடுவித்த சீனா,  கனடா - முடிவுக்கு வந்த இரு நாட்டு மோதல்
x
ஹுவெய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை கனடா விடுதலை செய்ததை தொடர்ந்து, இரண்டு கனடா நாட்டினரை சீனா விடுவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதார தடைகளை, பினாமி நிறுவனங்கள் மூலம் மீறிய சீனாவின் ஹுவெய் நிறுவனம், ஈரானிற்கு அமெரிக்க தொழில்நுட்ப கருவிகளை ரகசியமாக விற்பனை செய்தது. இதன் அடிப்படையில், 2018ஆம் ஆண்டில் கனடாவின் வான்குவர் விமான நிலையத்தில் ஹுவெய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வேன்ஸூ கைது செய்யப்பட்டார். 

ஹுவெய் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் ரென் ஸேன்பெயின் மகளான மெங் வேன்ஸூ கைது செய்யப்பட்டதிற்கு, சீனா கடும் கண்டனங்களை தெரிவித்தது. பிணையில் வெளியே வந்த மெங் வேன்ஸூவை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல 
வழக்கு தொடரப்பட்டது.
 
மெங் வேன்ஸூ கைது செய்யப்பட்ட பின், சீனாவில் இருந்த கனடாவைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களை உடனடியாக சீனா கைது செய்தது. அவரகள் சீனாவில் உளவு பார்த்ததாக சீன அரசு குற்றம் சாட்டியது. அவர்களில் ஒருவரான மைக்கேல் ஸ்பாவருக்கு சமீபத்தில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சீனா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் அடிப்படையில், மெங் வேன்ஸூவை கனடா விடுதலை செய்தது. அவர் உடனடியாக சீனாவிற்கு கிளம்பிச் சென்றார். அடுத்த சில மணி நேரங்களில் சீனச் சிறைச்சாலையில் இருந்த இரண்டு கனடா நாட்டு தொழிலதிபர்களும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் கனடாவிற்கு திரும்பியுள்ளனர். 

கனடா, சீனா இடையே எழுந்த மோதல்கள் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்