பஞ்சஷீரில் தொடர்ந்து தலிபான்கள் வெறியாட்டம் - எதிர்ப்பாளர்களை சுட்டுக்கொல்லும் பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தான் மாகாணத்தில் தங்கள் எதிர்ப்பாளர்களை தலிபான்கள் தொடர்ச்சியாக வேட்டையாடும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சஷீரில் தொடர்ந்து தலிபான்கள் வெறியாட்டம் - எதிர்ப்பாளர்களை சுட்டுக்கொல்லும் பயங்கரவாதிகள்
x
ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பஞ்சஷீர் மாகாணத்தை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் அங்கு தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டுவருவதாக சர்வதேச அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு தலிபான்கள் தங்களுக்கு எதிரானவர்கள என சிலரை காரில் கடத்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதேபோன்று ராணுவ உடையிலிருக்கும் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இவ்வாறு 20 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சஷீரில் கிளர்ச்சியாளர்களுக்கு சிம்கார்டை விற்றதாக குற்றம் சாட்டி, அப்துல் ஷாமி என்ற கடைக்காரரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பசெலெட், தலிபான்கள் வீடு வீடாக சென்று தொடர்ந்து அமெரிக்க படைகளுக்கு உதவியர்களை தேடி வருகிறார்கள் எனக் கூறியிருக்கிறார். 

ஆனால் மக்கள் தாக்கப்படுவதாக வெளியாகும் தகவல்களை மறுக்கும் தலிபான் பயங்கரவாத இயக்கம், அவர்கள் காவல்துறையினரை தாக்கியிருக்கலாம் எனக் கூறுகிறது. பிராந்தியத்தில் நிலைமை மோசமடைவதற்கு மத்தியில் மருந்து, உணவுப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுவதால் மக்கள் கால்நடையாக அங்கிருந்து வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது. தலிபான்கள் நெருக்கடி, பொருளாதார நிலைமை காரணமாக ஆப்கான் வானொலி நிலையங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மூடப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்