"350-க்கும் மேற்பட்ட தலிபான்கள் உயிரிழப்பு" - ஆப்கானின் பஞ்சஷீரில் நடப்பது என்ன...?

ஆப்கானிஸ்தானின் பஞ்சஷீர் மாகாணத்தை கைப்பற்ற தலிபான் படை முற்றுகையிட்டிருக்கும் நிலையில், எதிர்ப்பு படை பதிலடி கொடுத்து வருகிறது.
350-க்கும் மேற்பட்ட தலிபான்கள் உயிரிழப்பு - ஆப்கானின் பஞ்சஷீரில் நடப்பது என்ன...?
x
ஆப்கானிஸ்தானின் பஞ்சஷீர் மாகாணத்தை கைப்பற்ற தலிபான் படை முற்றுகையிட்டிருக்கும் நிலையில், எதிர்ப்பு படை பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்பு சண்டை தீவிரமடைந்திருக்கும் நிலையில் அங்கு நடப்பது என்ன என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஞ்சஷீர் மாகாணம், தலிபான்களை எதிர்க்கும் பிரிவினரின் வசம் உள்ளது.

இயற்கையாகவே இந்துகுஷ் மலைத்தொடரை பாதுகாப்பு கோட்டையாக கொண்ட பஞ்சஷீர் பள்ளத்தாக்கை 1980-களில் சோவியத் படைகளாலும், 1996-ல் தலிபான் படைகளாலும் கைப்பற்ற முடியவில்லை.
 
அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்திருந்தாலும், பஞ்சஷீர் மாகாணம் அவர்கள் வசமாகவில்லை.  

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை விரும்பாத ராணுவ வீரர்கள் இம்மாகாணத்திற்கு சென்ற நிலையில், துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலேவும் இங்குதான் இருப்பதாக கூறியிருக்கிறார்.

 தற்போது பஞ்சஷீர் மாகாணத்தை கைப்பற்ற, தலிபான் படைகள் முற்றுகையிட்டுள்ளன. அங்கு தலிபான்களுக்கும், ஆயுதம் தாங்கிய தலிபான் எதிர்ப்பு படையான ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணிக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை சண்டை தீவிரமடைந்த நிலையில், பஞ்சஷீரை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். 

இந்த வெற்றியை, தலிபான்கள் காபூலில் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டாடியுள்ளனர். இதில் 17 பேர் உயிரிழந்துள்ளளோடு, பலர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே தலிபான்களின் இந்த கூற்றை நிராகரித்திருக்கும் எதிர்ப்பு படை, 350க்கும் மேற்பட்ட தலிபான் பயங்கரவாதிகளை கொன்று வீழ்த்தி இருப்பதாக கூறியிருக்கிறது. 

இதற்கிடையே ஆப்கன் முன்னாள் துணை அதிபர் சலே, பஞ்சஷீரை தலிபான்கள் கைப்பற்றவில்லை என்றும் தலிபான் படையெடுப்புக்கு எதிராக சண்டையிட்டு வருகிறோம் எனவும் கூறியுள்ளார். தலிபான்கள் பஞ்சஷீரை கைப்பற்றிவிட்டனர் என பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் பொய்யானவை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அமெரிக்க ராணுவம் விட்டுச்சென்ற ஆயுதங்களுடன் அசுர பலத்துடன், பஞ்சஷீரை முற்றுகையிட்டிருக்கும் தலிபான்களை முன்னேறவிடாமல் எதிர்ப்பு படையினர் கட்டுப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Next Story

மேலும் செய்திகள்