அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா - நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கு சில மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்....
கொரோனா தொற்று மற்றும் மரணங்களின் மொத்த எண்ணிக்கையில் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கிறது, அமெரிக்கா. 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் இதுவரை 3.87 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 6.37 லட்சம் பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தினசரி தொற்றின் சராசரி அளவு சமீப நாட்களில் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் நிரம்பியுள்ளன. புளோரிடா, தெற்கு கரோலினா, டெக்சாஸ், லூசியானா போன்ற தென் மாகாணங்களில் உள்ள மருத்துமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சமீப வாரங்களில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 8 கோடி அமெரிக்க மக்கள் இன்னும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று அமெரிக்க அதிபரின் மருத்துவத் துறை ஆலோசகரான ஆன்டோனி பாசி (Anthony Fauci) கூறியுள்ளார். அமெரிக்காவில் தடுப்பூசிப் பற்றாக்குறையே இல்லாத நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலரும் தயக்கம், அலட்சியம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க அமெரிக்க அரசு முயற்சி செய்தும், பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவில் அடுத்த 4 மாதங்களில் கொரோனாவிற்கு மேலும் ஒரு லட்சம் பேர் பலியாக வாய்ப்புள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவத் துறை நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்கர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், இந்த மரணங்களை தவிர்க்க முடியும் என்று ஆன்டோனி பாசி கூறியுள்ளார்.
Next Story

