யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி - பிரிட்டன் அணி தோல்வி ரசிகர்கள் ஆத்திரம்

யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோல் அடிக்க தவறிய பிரிட்டனின் கருப்பின வீரர்கள் மீது நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது...
யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி - பிரிட்டன் அணி தோல்வி ரசிகர்கள் ஆத்திரம்
x
லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால், போட்டியின் முடிவுக்காக கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அப்போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.. இதனால் வெற்றியை நிர்ணயம் செய்ய ஆட்டம், பெனால்டி ஷூட்-அவுட் முறைக்கு சென்றது. பரபரப்பின் உச்சிக்கு சென்ற பெனால்டி ஷூட் ஆட்டத்தில் இத்தாலி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி 53 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையை கைப்பற்றியது. முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த பிரிட்டன் அணி சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அரிய வாய்ப்பை கோட்டை விட்டது.

பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரிட்டனின் மார்கஸ் ராஷ்போர்ட், ஜெடோன் சான்சோ, புகாயோ சாகா ஆகியோர் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது, அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. மூவரும் கருப்பின வீரர்கள் ஆவர். இந்நிலையில், தோல்வியால் விரக்தியடைந்த பிரிட்டன் ரசிகர்கள், இத்தாலியின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்களையும், தடுத்த போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்த போலீசார்,  49 ரசிகர்களை கைது செய்தனர். மோதல்களை தடுக்க முயன்ற 19 போலீசார் காயம் அடைந்தனர். மூன்று கருப்பு இன வீரர்களையும் பிரிட்டன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அநாகரிகமாக இனவெறி கருத்துகளால் திட்டி தீர்த்தனர். இது பெரும் சர்ச்சையான நிலையில், பிரிட்டன் ரசிகர்களின் இந்த இழிவான செயலுக்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், இளவரசர் வில்லியம்ஸ், இங்கிலாந்து கால்பந்து சங்கம் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் அணி பாராட்டுக்கு தகுதி படைத்தது எனக் கூறியிருக்கும் போரிஸ் ஜான்சன்,  சமூக வலைதளங்களில் வீரர்கள் குறித்து இனவெறியுடன் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியிருக்கிறார். அந்நாட்டு போலீசாரும் இனவெறி தாக்குதல் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, பிரிட்டன் அணியில் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதும் தேம்பி, தேம்பி அழுத சாகாவை, கேப்டன் ஹாரிகேன் ஆரத்தழுவி ஆறுதல்படுத்தும் காட்சிகளை பதிவிட்டு பலரும் இனவெறி ரசிகர்களுக்கு பதிலடியை கொடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்